கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.

2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம் உச்சரித்ததும், அவர்களை அதிகம் அச்சுறுத்தியதும் ஒரு பெயர்; கொரோனா. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் மனுக்குலத்துக்கு சவால் விட்டு, நின்று விளையாடுகிறது. இந்த மரண களத்தில் இதுவரை வென்றிருப்பதோ, அந்த கொரோனாதான்.

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசியோ, மருந்துகளோ இல்லாததால் அதற்குமுன் எந்த நாடும் கம்பீரமாக நிற்க முடியவில்லை. உலகுக்கே வலியண்ணனாக இருக்கும் அமெரிக்காவே கொரோனாவுக்கு முன் பெட்டிப்பாம்பாக அடங்கி இருக்கிறது. அப்படியிருக்கையில் சிறிய ஏழை நாடுகள் எல்லாம் எம்மாத்திரம்.

நாளுக்கு நாள் தனது உயிர்வாங்கும் கொடுங்கரத்தை நீட்டி ஆயிரக்கணக்கில் மனித உயிர்களை கபளகரம் செய்து வருகிறது இந்த கொரோனா. அதனுடன் சிக்காமல் தப்பித்து வரும் அப்பாவிகளையும் எப்படியாவது தனது மாயவலையில் வீழ்த்தி விடுகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுதான் சோகத்திலும் பெரும் சோகம்.

அப்படி கொரோனாவின் பிடியில் உலக அளவில் அதிகமானோர் சிக்கிய மோசமான நாளாக நேற்று முன்தினம் மாறியிருக்கிறது. அன்று ஒரேநாளில் மட்டும் உலக அளவில் 1 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 20 பேர் இந்த அழிவில்லா ஆட்கொல்லியிடம் சிக்கியதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. ஒரே நாளில் இவ்வளவு அதிகம்பேர் தொற்றுக்கு ஆளானது இதுவே முதல் முறையாகும்.

இதில் 54,771 பேர் பிரேசில்வாசிகள். அடுத்ததாக 36,617 அமெரிக்கர்களும், 15,400 இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை உலக அளவில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 4.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்து உள்ளனர்.

பிரேசில், அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தயவு தாட்சண்யம் இன்றி தொடர்ந்து தனது கொடூரத்தை நிகழ்த்துகிறது. இந்தியாவிலும் அதன் கோரப்பார்வை நிலைத்திருக்கிறது.

ஏற்கனவே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி சற்று ஓய்ந்திருந்த சீனா, தென்கொரியாவில் கூட மீண்டும் இந்த வைரஸ் தலைகாட்டி வருகிறது. அதுவும் சீனாவின் பீஜிங் நகரம் மீண்டும் கொரோனாவின் மையமாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாடுகள் மிகுந்த கவலைக்குள்ளாகி வருகின்றன.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதற்கு அதன் பரவல் வேகம் காரணமாக இருந்தாலும், உலக அளவில் சோதனைகள் அதிகரித்து வருவதால் இது வெளிச்சத்துக்கு வருகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விரைவில் உருவாக்கி கொரோனா வைரசை மிக விரைவில் உலகை விட்டு அகற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உலக நாடுகள் இருக்கும் நிலையில், கொரோனாவின் வேகம் இப்படி அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதற்கிடையே கொரோனாவின் பிடியில் இருந்து ஸ்பெயின் நாடு மெல்ல மெல்ல மீண்டு வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த அவசரநிலை திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதைப்போல மக்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. அங்கு இயல்பு நிலை கொண்டு வரப்பட்டாலும், வைரசின் 2-வது அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply