ஈரானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஞ்சு குழந்தைகளை விற்பனைக்கு வைத்த கும்பலை பொலிசார் கைது செய்து குழந்தைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஒரு குழந்தை பிறந்து வெறும் 20 நாட்களே ஆகியுள்ளது. இன்னொரு குழந்தை 20 மாதம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த கும்பல் விற்பனைக்கு வைத்த மூன்றாவது குழந்தையும் அடையாளம் காணப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் மீட்கப்படவில்லை என தெஹ்ரான் நகர பொலிஸ் தலைவர் ஹொசைன் ரஹிமி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு குழந்தையின் விலை 9,500 டொலர் எனவும் இன்னொரு குழந்தைக்கு 11,800 டொலர் எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஏழை குடும்பங்களில் இருந்து மிகக் குறைந்த தொகைக்கு குழந்தைகளை வாங்கி வந்து இணையம் வாயிலாக இந்த கும்பல் விற்பனை செய்து வந்துள்ளது.

தற்போது மீட்கப்பட்ட ஒரு குழந்தைக்கு 1,100 டொலர் எனவும் இன்னொரு குழந்தைக்கு 2,300 டொலர் தொகைக்கும் வாங்கியுள்ளனர். இதில் ஈடுபட்ட மூவரை தெஹ்ரான் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பேஸ்புக் நிர்வாகமும் விசாரணைக்கு உறுதி அளித்துள்ளது. மனித சுரண்டலுக்கு வழிவகுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடமில்லை எனவும், அது தத்தெடுப்புக்காக குழந்தைகளை விற்பனை செய்வதாக இருந்தாலும் அது சட்டவிரோதமே என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply