• ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை.

அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கில்லை.

அதனால் நிறைவேற்றதிகார ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு கருத்தொருமிப்பு என்பது எப்போதும் நழுவிக்கொண்டே செல்கிறது.

ஜுனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தன நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்ற வகையில் 1978 இல் தொடங்கிய ஆட்சி 1988 இல் முடிவிற்கு வந்தது.

அரசியல் சதுரங்க விளையாட்டில் ஜாம்பவானான ஜே.ஆர் தனது பதவிக்காலத்தின் இறுதி அந்தத்தில் அரசியலமைப்பை மீண்டும் திருத்தம் செய்வதன் மூலம் மூன்றாவது பதவிக்காலமொன்றுக்குப் போட்டியிடும் யோசனையையும் மனதிற்கொண்டிருந்தார். ஆனால் அதிஷ்டவசமாக அவ்வாறு நடைபெறாமல் போய்விட்டது.

ஜே.ஆர்

மூன்றாவது பதவிக்காலத்திற்குப் போட்டியிடும் எண்ணத்திலிருச்து ஜே.ஆர் பின்வாங்கச்செய்யப்பட்டார்.

அவருக்கு அப்போது 82 வயது. அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென்பதில் மனைவி எலினா உறுதியாக இருந்தார்.

ஜே.ஆர் உம் கூட அதற்கு இணங்கினார். அவர் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்பது அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மத்தியில் 1988 ஜுலை அளவில் தெரியவந்தது.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு ஆசைப்பட்டவர்களை அமைதியாக இருக்கச்செய்யவும், ஜே.ஆர் என்ன செய்யப்போகிறார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஊகிக்கவைக்கவும், ஒரு தந்திரோபாயமாக மீண்டும் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து நீண்டகாலமாக எதனையும் பகிரங்கமாக அறிவிக்காதிருந்தார்.

அரசியலிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக ஜே.ஆர் 1988 செப்டெம்பரில் முறைப்படி அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழுவினதும், செயற்குழுவினதும் கூட்டுக்கூட்டம் ஒன்றுக்குப் பிறகே அந்த அறிவிப்பு வந்தது.

அடுத்த வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு அவர் உட்கட்சித் தேர்தலொன்றை நடத்துவாரென்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அந்தத் தருணத்தில் கட்சிக்குள் போட்டி இடம்பெறுவதை ஜே.ஆர் விரும்பவில்லை. எனவே தனக்குப் பிறகு ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாஸவின் பெயரைப் பிரேரித்து அவர் அதிர்ச்சியொன்றைக் கொடுத்தார்.

மேலும் ஒரு திருப்பமாக பிரதம போட்டியாளர்களாகக் கருதப்பட்ட லலித் அத்துலத்முதலியையும், காமினி திஸாநாயக்கவையும் கொண்டு பிரேமதாஸவின் நியமனத்தைக் கூட்டாக ஆமோதிக்கவைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாஸ ஏகமனதாகத் தெரிவானார்.

நியமனப்பத்திரத்தாக்கல் 1988 நவம்பர் 10 ஆம் திகதி முடிவுற்றது. 1988 டிசம்பர் 19 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இறுக்கமான போட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணசிங்க பிரேமதாஸ 2,569,199 (50.43 சதவீதம்) வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறிமாவோ பண்டாரநாயக்க 2,289,860 (44.95 சதவீதம்) வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்தார்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் வேட்பாளரான ஒஸ்வின் (ஒஸீ) அபேகுணசேகர 235,719 (4.63 சதவீதம்) வாக்குகளைப் பெற்று தொலைதூர மூன்றாமிடத்திற்கு வந்தார்.

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டார்.

1989 பெப்ரவரி 15 பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தின் மொத்தம் 225 ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சி 125 ஆசனங்களைக் கைப்பற்றியது. (விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் முதன்முதலாக நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் அதுவாகும்.

பிரேமதாஸவின் மேலாதிக்கத்தலைமைத்துவம்

இந்தக் கட்டுரையின் முதற்பாகத்தில் குறிப்பிட்டதைப்போன்று ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியதன் மூலமும், பிரம்மாண்டமான பெரும்பான்மையைக் கொண்டிருந்த பாராளுமன்றத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததன் மூலமும் உண்மையில் ஓர் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரியாக செயற்பட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த தனது லில்லிபுட்டன் மத்தியில் ஜே.ஆர் ஒரு குலிவராக நின்றார்.

ரணசிங்க பிரேமதாஸவைப் பொறுத்தவரை ஜே.ஆர்.ஜெயவர்தனவைப் போன்று பிரேமதாஸ தனது பாராளுமன்ற சகாக்கள் மத்தியில் பிரம்மாண்டமானவராக இருக்கவில்லை.

சமத்துவமானவர்கள் மத்தியில் முதலாவது ஆளாக பிரேமதாஸ சிலரால் தயக்கத்துடனேயே ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

தவிரவும் 1977 இல் பாராளுமன்றத்தின் மொத்த 168 ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 141 ஆசனங்கள் இருந்ததைப்போலன்றி 1989 இல் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தில் அந்தக் கட்சி 125 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது.

ஜனாதிபதிகள் என்றவகையில் தனக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக்கொண்டவராகவே பிரேமதாஸ இருந்தார்.

ஒரு எதேச்சதிகார ஜனாதிபதி என்றவகையில் ஜே.ஆரின் பாதச்சுவடுகளைப் பின்பற்ற பிரேமதாஸ முயற்சித்தார்.

உயர்தட்ட அதிகாரிகளையும், உத்தியோகத்தர்களையும் கொண்டு வேலை செய்விப்பதில் அடிமைகளை மேய்ப்பது போன்று பிரேமதாஸ நடந்துகொள்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இப்போது அவர் தனது பாராளுமன்ற சகாக்களைப் பொறுத்தவரையிலும் கூட அவர் அவ்வாறாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்.

காமினி திஸாநாயக்கவும், லலித் அத்துலத்முதலியும் ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாஸவிற்கு சவாலாக இருக்கவில்லை என்றபோதிலும், பிரேமதாஸ அவர்களை மன்னித்து நடக்கும் மனப்போக்கை பிரேமதாஸ வெளிப்படுத்தவில்லை.

டி.பி.விஜயதுங்கவை பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பிரேமதாஸ உயர்த்திய அதேவேளை திஸாநாயக்கவுக்கும், அத்துலத்முதலிக்கும் முக்கியத்துவம் குறைந்த அமைச்சுப் பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களைத் தரங்குறைத்தார்.

பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் திஸாநாயக்கவின் அமைச்சர் பதவியையும் பிரேமதாஸ பறித்துக்கொண்டார்.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்வதற்கு திஸாநாயக்க 6 மாதகால விடுமுறையைக் கேட்டபேர்து பிரேமதாஸ அதற்கிணங்கி, அமைச்சரவை மாற்றமொன்றில் காமினிக்கு எந்தப்பதவியையும் கொடுக்கவில்லை.

மேலும் பிரேமதாஸ தனது அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவற்றில் மிகவும் மோசமானது ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ்மாதிபர் ஏ.சி.லோரன்ஸின் கீழ் விசேட விசாரணைப் பிரிவொன்று அமைக்கப்பட்டதாகும்.

அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மீதான இலஞ்சம், ஊழல், அதிகாரத்துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதியினால் மேலும் நேரடியாகவே விசாரணை செய்யப்படுவதற்கான இந்த விசேட விசாரணைப் பிரிவிற்கு பாரப்படுத்தப்பட்டனர்.

‘கெஸ்ரப்போ’ என்று வர்ணிக்கப்பட்ட இந்தப் பிரிpவைப் பலரும் எதிர்த்தார்கள். பிரேமதாஸவின் அமைச்சர்களும், எம்.பிக்களில் பலரும் அதற்குப் பயந்தார்கள்.

ரணசிங்க பிரேமதாஸவின் மேலாதிக்கத் தலைமைத்துவத்தின் கீழ், அவருக்கு நெருக்கமான – அவரால் விரும்பப்படுகின்ற சிலரைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களும், எம்.பிக்களும் நடைமுறையில் எந்த அதிகாரமும் அற்றவர்களாகவே இருந்தார்கள்.

பிரேமதாஸவிற்கு எதிரான கிளர்ச்சி 

அத்தகைய ஒரு சூழ்நிலையில் பிரேமதாஸவிற்கு எதிரான ஒரு கிளர்ச்சி தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஜனாதிபதி பிரேமதாஸவிற்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையைக் கொண்டுவந்து அவரைப் பதவி நீக்குவதற்கான சதி முயற்சியொன்றின் சூத்திரதாரியாக காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி, ஜி.எம்.பிரேமசந்திர ஆகியோர் விளங்கினர்.

இந்த அந்தரங்கமான முயற்சியில் ஆரம்பத்தில் எம்.எச்.முகமதுவும் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரிடமிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்களான எம்.பிக்களிடம் இருந்தும் இந்த அரசியல் குற்றப்பிரேரணைக்கு கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

சுமார் 140 கையெழுத்துக்கள் பெறப்பட்டது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான அல்லது 180 கையெழுத்துக்கள் தேவைப்பட்டன.

தன்னைப் பதவி நீக்குவதற்கான முயற்சிகளை அறிந்துகொண்ட பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, சிவசேன குரே மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி போன்றவர்கள் இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்தார்கள்.

பெரும்பாலான ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களின் எழுத்துக்கள் வாபஸ் பெறச்செய்யப்பட்டன.

சில எம்.பிக்கள் தாங்கள் இந்த முயற்சியில் ஒருபோதும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று மறுத்தனர்.

இறுதியில் அரசியல் குற்றப்பிரேரணையைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சபாநாயகர் பாராளுமன்றத்தில் நிராகரித்தார்.

தன்னைப் பாதுகாத்துக்கொண்டு தனது நிலையை வலுப்படுத்திய பிறகு அரசியல் குற்றப்பிரேரணையின் சூத்திரதாரிகளான ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும், பிரேரணையில் கைச்சாத்திட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட கட்சியின் வேறு எம்.பிக்களுக்கும் எதிராகப் பிரேமதாஸ கடுமையான நடவடிக்கையில் இறங்கினார்.

திஸாநாயக்க, அத்துலத்முதலி மற்றும் பிரேமசந்திர உட்பட ஐக்கிய தேசியக்கட்சியின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் தமது பாராளுமன்ற ஆசனங்களையும் இழந்தனர்.

அரசியல் குற்றப்பிரேரணை நெருக்கடியில் பிரேமதாஸ வெற்றிபெற்ற போதிலும், அந்த அனுபவம் அவர்மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அதற்குப் பிறகு அவரால் சாதாரணமானவர்களாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிழையான முறையில் நெருக்குதல் கொடுத்தால் எதிர்காலத்திலும் கிளர்ச்சியொன்று ஏற்படக்கூடும் என்ற நிலையிருந்தது.

அதனால் ஜனாதிபதி பிரேமதாஸ தனது கர்வத்தனமான மனப்போக்கையும், சர்வாதிகார நடத்தையையும் குறைத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார்.

தனது அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கும் அவர் நிர்பந்திக்கப்பட்டார்.

பலம்பொருந்திய ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள்

பாராளுமன்றத்தில் தங்கியிருக்காத ஒரு நிறுவனமாக நிறைவேற்றதிகாரபீடம் உருவாக்கப்பட்ட போதிலும், பாராளுமன்றத்தின் ஊடாக எப்போது செயற்பட வேண்டுமு; என்பதில் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு இருந்த ஆர்வம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றின் கீழும் கூட பாராளுமன்றத்திற்குப் பெருமளவு அதிகாரங்களைக் கொடுத்திருந்தது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பாராளுமன்றத்திலும், முற்றுமுழுதான கட்டுப்பாட்டை கொண்டிருந்ததே ஜே.ஆர் காலத்தில் நிலவிய அரசியல் யதார்த்தமாகும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி சகல அதிகாரங்களும் பொருந்திய ஒருவராக இருப்பதற்குப் பாராளுமன்றப் பலம் முழுமையாகத் தேவைப்பட்டது என்பதையே நடைமுறை அரசியல் உணர்த்தியது.

இலங்கையில் பலம்பொருந்திய நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோது பாராளுமன்றம் மூன்று ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அரசறிவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் குற்றப்பிரேரணையை நிறைவேற்றுவது முதலாவது கட்டுப்பாடு. இரண்டாவது ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடுகளுக்கு எதிராக வாக்களித்தல்.

மூன்றாவது புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை அதன் பதவிக்காலத்தில் முதல் ஒரு வருடத்திற்குள் ஜனாதிபதி கலைக்கமுடியாதவாறான கட்டுப்பாடாகும்.

இப்போது இந்த ஒருவருடம் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் மூலம் 4 வருடங்களாக விரிவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கரை வருடகால கட்டாயப்பதவிக்காலமே 2018 இல் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத்தேர்தலை நடத்துவதைத் தடுத்தது.

இதன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு இவ்வருடம் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக விரோதமான பெரும்பான்மையைத் திரட்டக்கூடிய ஆற்றலைக் கொண்ட ஒரு பாராளுமன்றம், பலம்பொருந்திய நிறைவேற்றதிகார ஜனாதிபதியைப் பொறுத்தவரை பலவீனமான அம்சமாக இருக்கமுடியும் என்பதை பிரேமதாஸவின் அரசியல் குற்றப்பிரேரணை அனுபவம் வெளிக்காட்டியது.

அடுத்து நடைபெறக்கூடிய தேர்தல்களில் ஆளுங்கட்சியினால் அல்லமு எதிர்க்கட்சியினால் பெரும்பான்மையைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் ‘ஊக்குவிப்பு சலுகைகளின்’ ஊடாகத் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்களை அரசாங்கத்தின் அணிக்குள் கவர்ந்திழுக்கும் நிலையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் பதவிகள், சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதன் ஊடாக அத்தகைய உறுதியான பாராளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைப்பது அவசியமாகிப்போனது.

அநாவசியமாகப் பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்குவது, முற்றிலும் பொருத்தமற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களாக, இராஜாங்க அமைச்சர்களாக நியமிப்பதென்ற அணுகுமுறை வழமையானதாக மாறிப்போனது.

இந்தக் கண்டிக்கத்தக்க நடைமுறையைப் பின்பற்றியதில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய சகலரும் குற்றப்பொறுப்புடையவர்களே.

 

எனவே ஜெயவர்தனவின் கீழ் சுமூகமாக முன்னேற்றம் கண்ட பலம்பொருந்திய நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி ரணசிங்க பிரேமதாஸ காலத்தின்போது ஒரு அருவருக்கத்தக்க மாறுதலுக்கு உள்ளானது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சகல ஜனாதிபதிகளுமே பிரதானமாக பாராளுமன்றத்தின் ஊடாகப் பணியாற்றினார்கள்.

அவர்கள் எல்லோரும் பாராளுமன்றத்துடன் சேர்ந்து பணியாற்றுவதிலும், பாராளுமன்றத்தின் ஊடாகப் பணியாற்றுவதிலும் சௌகரியத்தைக் கொண்டிருந்தார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்தன தொடங்கி மைத்திரிபால சிறிசேன வரை சகலருமே ஜனாதிபதியாகப் பதவிக்கு வருவதற்கு முன்னதாகப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களே.

சந்திரிகா குமாரதுங்க மாத்திரமே பாராளுமன்றத்தில் ஒருசில மாதங்கள் அங்கம் வகித்தார். மற்றவர்கள் பலவருட காலங்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்கள்.

இந்த விடயத்தில் தனியான ஒரு விதிவிலக்காக தற்போதைய ஜனாதிபதி நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ விளங்குகிறார்.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த பிரபலமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஒருபோதும் இருக்காமலேயே ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கோத்தாபயயவிற்கும் சந்திரிகா, மஹிந்த, மைத்திரிபால போன்று அவருக்கு முன்னர் பதவியில் இருந்தவர்களுக்கும் இடையிலிருந்த இன்னொரு வேறுபாடு, அவர் ஜனாதிபதித்தேர்தல் பிரசாரத்தின் போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போவதாக உறுதியளிக்கவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி தொடருகிறது

நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவி இப்போது 40 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இப்போது நடைமுறையில் இருக்கிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறை அதன் தொடக்கத்திலிருந்தே கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது.

இலங்கையில் தவறாக முடிந்துபோன பெரும்பாலும் சகல காரியங்களுக்குமே ஜே.ஆரின் நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி முறைமையே குற்றஞ்சுமத்தப்பட்டும் வருகிறது.

இலங்கையில் சகல தீங்குகளுக்கும் மூலகாரணம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையே காரணம் எனக்கூறுவது ஒரு புதிய பாணியாகிவிட்டது.

1991 இல் காமினி திஸாநாயக்கவினதும், லலித் அத்துலத்முதலியினதும் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு எதிராகக் கிளர்ச்சி நேரத்திலிருந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை இலங்கையின் அரசியல் விவாதங்களில் ஊடுருவி விட்டது.

1947 இல் வெளியான முதலாவது சிங்களப் பேசும் படத்தின் பெயர் ‘ கடவுனு பொறந்துவ’. இதனர்த்தம் மீறப்பட்ட வாக்குறுதி என்பதாகும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியைப் பொறுத்தவரை கடந்த சுமார் கால்நூற்றாண்டாக இலங்கை மக்கள் கண்டுவருவது மீறப்பட்ட வாக்குறுதிகளையே.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல் காலங்களில் வாக்குறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிறகு தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுகின்ற காட்சியை இலங்கை மக்கள் கண்டுவந்திருக்கிறார்கள்.

ஜனாதிபதி சிறிசேனவும், பிரதமர் விக்கிரமசிங்கவும் மாத்திரமே அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவிற்கேனும் குறைப்பதற்கு முயற்சித்தார்கள்.

ஒழிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த போதிலும், நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி ஒரு நீண்ட ஆயுட்காலத்தை அனுபவித்து வருகிறது.

பல அரசாங்கங்கள் வந்துபோய்விட்டன. பல்வேறு ஜனாதிபதிகள் வந்துபோய்விட்டார்கள்.

ஆனால் நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதற்குப் பிரதான காரணம் நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவியை ஒழிப்பது தொடர்பில் பொதுவில் நாட்டின் அரசியல் கட்சிகளும், குறிப்பாக இரு பிரதான அரசியல் கட்சிகளும் கருத்தொருமிற்கு வருவதற்கு இயலாமல் இருக்கின்றமை அல்லது விருப்பமில்லாமல் இருக்கின்றமை ஆகும்.

ஒரு அரசியலமைப்புத் திருத்தம் அல்லது புதியதொரு அரசியலமைப்பின் ஊடாக மாத்திரமே நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கவோ அல்லது அதன் அதிகாரங்களைக் குறைப்புச் செய்யவோ முடியும்.

இதற்குப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் ஆதரவும், சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரமும் தேவையாகும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பவில்லை.

அதேவேளை ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை.

அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கில்லை. அதனால் நிறைவேற்றதிகார ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு கருத்தொருமிப்பு என்பது எப்போதும் நழுவிக்கொண்டே செல்கிறது.

ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷவின் நிலைப்பாடு

இத்தகையதொரு பின்புலத்திலேயே கோத்தபாய ராஜபக்ஷ கடந்த வருடம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஜனவரி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரையில் புதிய ஜனாதிபதி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிப்பதவி தொடர்பிலான தனது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினார்.

 


‘நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையார் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவராக இருந்தது எனக்கு ஞாபகம்.

பொதுமக்கள் கலரியிலிருந்தே நான் பாரர்ளுமன்றக்கூட்டங்களை அடிக்கடி அவதானித்தேன்.

அந்த நேரத்தில் இடம்பெற்ற விவாதங்கள் மிகவும் முக்கியமானவை. விவாதங்களின் தர்க்கமும், வளமான வாக்குவாதங்களும் நிறைந்தவையாக இருந்தன.

தாங்கள் வகிக்கின்ற பதவியினதும், பாராளுமன்றத்தினதும் கௌரவத்தைப் போற்றுகின்ற வகையில் உறுப்பினர்கள் எப்போதும் நடந்துகொண்டார்கள்.

அப்போது மக்கள் பாராளுமன்றம் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள். மக்களின் பிரதிநிதிகளை அவர்கள் மதித்தார்கள்.

துரதிஷ்டவசமாக பின்னராக காலத்தில் அந்த மதிப்பு படிப்படியாக அருகிக்கொண்டு வந்துவிட்டது.

‘பாராளுமன்றம் மீண்டும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஆராயப்படுகின்ற – தேசியக்கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்ற – சட்டவாக்கப் பொறுப்புக்கள் முறையாக நிறைவேற்றப்படும் ஒரு முன்னுதாரணமான நிறுவனமாக மாறவேண்டும்.

பாராளுமன்றம் மீண்டும் மக்களால் மதிக்கப்படும் நிறுவனமாக மாறுவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு இந்த சபையின் உறுப்பினர்களின் கைகளிலேயே இருக்கிறது’ என்று அந்த உரையில் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாகப் பலப்படுத்துவதற்கான தேவை குறித்து ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

‘ஜனநாயகமொன்றின் வெற்றி என்பது அரசியலமைப்பிலேயே தங்கியிருக்கிறது. இதுவரையில் தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கும் 1978 அரசியலமைப்பு அதில் உட்கிடையாக உள்ள விளங்காத்தன்மைகள் மற்றும் குழப்பங்கள் காரணமாகத் தற்போது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கிறது.

எமது நாட்டின் பாதுகாப்பு, சுயாதிபத்தியம், உறுதிப்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கத் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமானதாகும்.

‘விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலுள்ள சாதகமான அம்சங்களைத் தொடர்ந்து வைத்திருக்கின்ற அதேவேளை, பாராளுமன்றத்தின் உறுதிப்பாட்டையும் மக்களின் நேரடிப்பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன.

இலக்கங்களின் ஊடாகத் தேர்தலை வெல்லமுடியும் என்றபோதிலும் கூட, உறுதிப்பாடற்ற பாராளுமன்றம் ஒன்றினால் தெளிவான தீர்மானங்களை எடுக்கமுடியாது என்பதுடன் எமது நாட்டிற்குப் பொருந்தாத தீவிரவாதப் போக்குகளின் செல்வாக்கின் கீழ் அது தொடர்ந்தும் இருக்கும் நிலையும் ஏற்படும்.

மக்களின் இறைமையை உறுதிசெய்யக்கூடிய பலம்பொருந்திய நிறைவேற்றதிகாரபீடம், பாராளுமன்றம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை ஆகியவற்றை நிறுவக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக இந்தப் பிரச்சினையை எம்மால் தீர்க்கமுடியும்’.

பலம்பொருந்திய நிறைவேற்றதிகாரபீடம், பாராளுமன்றம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை ஆகியவற்றை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவின் நோக்கை அவரின் முதன்முதலான பாராளுமன்ற உரையின் மேற்ப பந்திகள் மூலம் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைப்புச்செய்து பாராளுமன்றத்தையும், பிரதமர் பதவியையும் பலப்படுத்துகிறது.

இந்தத் திருத்தம் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் பல அதிகாரங்களை இல்லாமல் செய்மு, 2019 நவம்பரில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ஒரு பெயரளவு தலைவராக மாத்திரமே இருக்கும் நிலையை உருவாக்குமென சில அரசியல் நிபுணர்கள் அபிப்பிராயம் கூறுவதற்கு வழிவகுத்தது.

ஆனால் மற்றையவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணத்திற்கு பைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிகையில் கடந்த அக்டோபரில் கலாநிதி அசங்க வெலிகல எழுதிய கட்டுரையொன்றில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

‘1978 அரசியலமைப்பின் கீழான அரசாங்கக் கட்டமைப்பிற்குக் குறிப்பிட்ட சில மாற்றங்களை 19 அரசியலமைப்புத்திருத்தம் செய்திருக்கிறது என்று அதேவேளை, அரசியலமைப்பின் அடியாதாரக் கட்டுமானமாக உள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையிலான அரசாங்கத்தை அது ஒழிக்கவில்லை.

அரசியலமைப்பு வாசகங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்துக்கொண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதிப்பதவி வெறுமனே சம்பிரதாயபூர்வமானதாக மாறிவிடுமென வாதம் செய்வது பொருத்தமானதல்ல’.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தற்போது 6 வருடங்களுக்கும் அதிகமான காலம் பதவியிலிருந்து வருகிறார்.

இந்தக் கட்டுரையின் முதற்பகுதியில் குறிப்பிட்டதைப் போன்று, ‘இன்று இருப்பது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் ஒரு அதிகாரம் மிக்க ஜனாதிபதியே. அவர் கடந்த கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைக் கொண்டிராத காபந்து அமைச்சரவையினதும், பிரதமரினதும் உதவியுடன் அரசை நிர்வகிக்கிறார்.

கொவிட் – 19 தொற்றுநோயின் வடிவில் நாடு மிகப்பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும் செயற்படுகின்ற பாராளுமன்றமொன்று இல்லை.

பிரத்யேகமான சூழ்நிலைகளின் கீழ் கோத்தபாய ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தங்கியிராத இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக விளங்குகிறார்’.

இந்த விடயங்களும் கோத்தாபயராஜபக்ஷவின் நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவியுடன் தொடர்புடைய ஏனைய விவகாரங்களும் இந்தக் கட்டுரையின் மூன்றாவதும், இறுதியானதுமான பகுதியில் விரிவாக ஆராயப்படும்.

 -டி.பி.எஸ்.ஜெயராஜ்

Share.
Leave A Reply