கொரோனா வைரஸ் காரணமாக பல வாரங்களாக முடங்கிக் கிடந்த உலகம், தற்போது மெதுவாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. முடக்க நிலை மேலும் தொடர்ந்தால், கொரோனா உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்பை விட ,பொருளாதார மந்த நிலையால் ஏற்படும் பாதிப்புகள் தீவிரமானதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டே, கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையிலும், இந்தியா உட்பட பல நாடுகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து வருகின்றன. இந்த தளர்வுகள் மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்தாலும், மீண்டும் மனித நடமாட்டம் அதிகரிக்கும் நிலை வந்தால் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை பல நாடுகள் சந்திக்க வேண்டி இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அதென்ன கொரோனா வைரஸின் இரண்டாவது அலை. இந்த கட்டுரையில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பெரும்பாலான நாடுகளை புரட்டிப் போட்டு வந்த நாட்களில், அந்த வைரஸின் தீவிரத்தை சிறப்பாக கட்டுப்படுத்தியதாக சிங்கப்பூரை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியது. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே அங்கு நிலைமை தலைகீழானது. சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்த அரசு, அங்கிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்கும் முகாம்களை கண்காணிப்பதில் கோட்டை விட்டது.
அதே போல தென்கொரியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சில வாரங்களில் வர்த்தக நிறுவனங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அந்நாட்டின் தலைநகர் சோலில் உள்ள சில மதுபானவிடுதிகளுக்கு வந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பலத்த அடி வாங்கிய வூஹான் நகரம், பல மாதங்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், மற்றொரு சீன நகரான ஜிலினில் மீண்டும் கொரோனாவின் உள்ளூர் பரவல் கண்டறியப்பட்டது.
இந்த நிலையைத்தான் கொரோனா பரவலின் இரண்டாவது அலை என விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.
1918-ஆம் ஆண்டில் சுமார் 5 கோடி பேரை கொன்று குவித்து ஸ்பானிஷ் ஃப்ளு தொற்று, முதல் முறை பரவியதை விட இரண்டாவது அலையாக பரவிய போதுதான் அதிக உயிர்களை காவு வாங்கியது. இதன் மூலமே இந்த இரண்டாவது அலை எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இரண்டாவது அலை என்றால் என்ன?
கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், திடீரென கட்டுக்கடங்காத அளவில் அந்த வைரஸ் மீண்டும் பரவத் தொடங்குவதைத்தான் இரண்டாவது அலை என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
உதாரணத்திற்கு ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அதை குணப்படுத்த தொடர்ந்து காயம்பட்ட இடத்தில் மருந்து இட்டுக்கொண்டே இருக்க வேண்டும். காயம் இப்போது பரவாயில்லையே என திடீரென மருந்து போடுவதை நிறுத்தினால், அந்த காயம் மேலும் மோசமாகி சீழ் பிடித்து வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
இதே போலத்தான், கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்காமல், அதன் தீவிரம் குறைந்துள்ளது என்ற காரணத்திற்காக மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க அனுமதித்தால் அது திடீரென பல மடங்கு தீவிரத்தோடு, ஒரு சுனாமி அலையப் போல பரவத் தொடங்கும். இது கொரோனா ஒழிப்பில் உலகம் சந்திக்க இருக்கும் அடுத்த சவால் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இரண்டாவது அலையை சமாளிப்பது அவ்வளவு சிரமமானதா?
ஈக்வடார் நாட்டின் குவயாகீல் நகரில் திடீரென நூற்றுக்கணக்கானவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால், அங்கு மருத்துவனைகள் நிரம்பி வழிந்தன. இறந்தவர்களின் உடல்களை மீட்க கூட அரசால் முடியாததால்,பிணங்கள் சாலைகளில் வீசப்பட்டன. மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த, பிணவறைகளில் இடமில்லாததால் சில உடல்கள் அழுகிப்போயின.
அப்படியென்றால் திடீரென அந்த பகுதியில் இரண்டாவது அலையாக கொரோனா தீவிரமடைந்தால், நிலைமை என்னாகும் என சற்று யோசித்து பாருங்கள்.
இதுதவிர இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் மீண்டும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டால், உலக பொருளாதாரம் நான் நினைத்துப்பார்க்க முடியாத நிலைக்கு அதளபாதளத்திற்கு செல்லும். சில ஏழை நாடுகளில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே கைவிடப்பட்ட நிலைக்கு வரும்.எனவேதான் இரண்டாம் அலையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பல நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தியா இரண்டாவது அலையை சந்திக்குமா?
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றுகளின் தீவிரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. மேலும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைவு. எனவே கொரோனா வைரஸின் உச்சகட்டம் இந்தியாவில் எப்போது ஏற்படும் என்பதை கணிக்க முடியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர். இதனால் இரண்டாவது அலை எப்போது ஏற்படும் என்பதையும் துல்லியமாக கூற முடியவில்லை.
இருப்பினும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், மிக கவனத்துடன் முடக்க நிலை தளர்த்தப்படாவிட்டால் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எப்படி இரண்டாவது அலையை தடுப்பது?
“உலகளாவிய தொற்றுகள் என்பது நெருப்பை போன்றது. எரிபொருள் அதிகமாக இருக்கும் போது அவை கொழுந்து விட்டு எரியும். எரிபொருள் குறையும் போது, அந்த நெருப்பின் தீவிரமும் குறையும்“ என்கிறார் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் தொற்று நோய் பிரிவு பேராசியரான ஜஸ்டின் லெஸ்லர்.
இன்னொரு பக்கம், பொருளாதார நடவடிக்கைகளை பல மாதங்களாக நிறுத்தி வந்தால், அது பசி, பட்டினி போன்ற வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நியாயமான ஒரு காரணம்.
எனவே வர்த்தக நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும், அதே சமயம் அது தொற்று பரவாத வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காத்தான் அரசுகள் தற்போது பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றன.
இதில் தனிநபர்களின் பங்களிப்பு என்ன?
“தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, விரிவான நடவடிக்கைகள் மூலமே கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார். ஆனால் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது இரண்டறை ஆண்டுகளாகவது ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் இந்த இரண்டறை ஆண்டுகள் முழுவதும், நம் வாழ்க்கை முறையே மாறக்கூடும். முக கவசம் மற்றும் கையுறைகள் அணிவது நமக்கு தினசரி பழக்கமாகிவிடும். எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்படும். தேவையில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். உங்களை அறியாமலேயே அடிக்கடி கைகளை கழுவுவீர்கள்.
இவையெல்லாம் முதலில் சற்று கடினமாக இருந்தாலும், கொரோனாவுக்கு எதிராக போரில் அரசுக்கு நாம் இப்படித்தான் ஒத்துழைப்பை அளிக்க முடியும். இந்த புதிய வாழ்க்கை முறைக்கு நாம் விரைவாக பழகிக் கொண்டால், நம்முடைய விடிவு காலம் வெகு தொலைவில் இல்லை.
கட்டுரை தொகுப்பு செந்தில் குமார்