தனது 30வது வயது வரை பெண் என்று நினைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவர், தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அவர் மரபணு ரீதியாக ஆண் என்று கண்டறியப்பட்டார் என்கிறது பிடிஐ செய்தி.
மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு விந்தகப் புற்றுநோய் இருப்பதும் மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண் என கண்டறியப்பட்ட அந்த நபரின் 28 வயதாகும் சகோதரிக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு ‘ஆன்ட்ரோஜன் இன்சென்சிடிவிடி சிண்ட்ரோம்’ எனும் இதே மரபணுக் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆன்ட்ரோஜன் இன்சென்சிடிவிடி சிண்ட்ரோம் என்றால் என்ன?
ஆன்ட்ரோஜன் இன்சென்சிடிவிடி சிண்ட்ரோம் என்பது பிறக்கும்போது ஆணாகப் பிறந்தாலும், பழக்க வழக்கங்களில் பெண்ணைப்போல் நடந்து கொள்ளும் நிலையாகும்.
அதாவது ஆண்களுக்கான உடலியல் பண்புகளை வழங்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் செயல்படாமல் இருக்கும் குறைபாடு இது.
கொல்கத்தாவில் வசிக்கும் 30 வயதாகும் அவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் முடிந்துவிட்டது.
அவர் அடிவயிற்று வலி காரணமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சிகிசைக்காக சென்றார்.
புற்றுநோய் நிபுணர் மருத்துவர் அனுபம் தத்தா மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சௌமென் தாஸ் ஆகியோர் மருத்துவப் பரிசோதனை செய்து அவரின் உண்மையான பாலினத்தை கண்டறிந்துள்ளனர்.
”தோற்றத்தில் அவர்கள் பெண் போன்று இருப்பர்; அவர்களின் குரல், மார்புப் பகுதி, பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதி என அனைத்தும் பெண் போலவே இருக்கும்.
ஆனால் பிறந்ததிலிருந்து அவர்களுக்கு கருப்பை மற்றும் சூலகம் இருக்காது. அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்காது,” என மருத்துவர் தத்தா பிடிஐயிடம் ஆன்ட்ரோஜன் இன்சென்சிடிவிடி சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்கள் குறித்துக் கூறியுள்ளார்.
இது 22,000 பேரில் ஒருவருக்கு இருக்கும் அரிய நிலையாகும் என மருத்துவர் தத்தா கூறினார்.
பரிசோதனையில் அவருக்கு கருப்பை இல்லை என தெரிந்ததும் மருத்துவர்கள், பாலின பிரச்சனைகளைக் கண்டறியும் கேரியோடைப்பிங் (Karyotyping) பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது க்ரோமோசோம் XY என்று இருப்பது கண்டறியப்பட்டது.
XY என்பது ஆண்களுக்கான குரோமோசோம் ஆகும். பெண்களுக்கு இது XX ஆக இருக்கும்.
”அடிவயிற்று வலி என அவர் வந்தபோது மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
அப்போது அவரது உடலில் விந்தகம் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவருக்கு விந்தகப்புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று மருத்துவர் தத்தா விளக்கினார்.
தற்போது அவர் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையில் உள்ளார். மேலும் நல்ல உடல்நிலையிலேயே உள்ளார்.
”அவருடைய விந்தகம் வளராமல் இருந்ததால் அவரால் விந்து உற்பத்தி செய்ய முடியவில்லை.
ஆனால் அவரது உடலில் இருந்த பெண் ஹார்மோன்கள் அவருக்கு பெண் தோற்றத்தை அளித்துள்ளது,” என மருத்துவர் தத்தா கூறியுள்ளார்.
உளவியல் ஆலோசனை
தான் ஓர் ஆண் எனத் தெரிந்ததும் அந்த நபரின் நிலை என்ன என்பதைக் கூறுகையில், “ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டு , ஓர் ஆணைத் திருமணம் செய்து கிட்டதட்ட ஒரு தசாப்தமாக வாழ்ந்துள்ளார். இப்போது அவருக்கும் அவருடைய கணவருக்கும் நாங்கள் அவர்கள் வாழ்க்கையைத் தொடருமாறு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறோம்,” என்றார் மருத்துவர்.
அந்தத் தம்பதி கருத்தரிப்புக்காகக் பல முறை முயற்சி செய்தும் அந்த முயற்சி தோல்வியிலேயே தழுவியுள்ளது எனத் தெரிய வருகிறது.
இதற்கு முன்னால் அந்த நபரின் தாய் வழியில் உள்ள உறவினர்கள் இருவருக்கும் ஆண்ட்ரோஜன் இன்செசிடிவிடி சிண்ட்ரோம் இருப்பது தெரிய வந்துள்ளது என புற்றுநோய் நிபுணர் தத்தா கூறுகிறார்.