இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் போலீஸாரே தொடர்புப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 16 போலீஸார் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள்

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் சமிந்த பிரியங்கர தயா மல்லவாராட்ச்சி என்ற நபர் கடந்த மாதம் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 4 அதிகாரிகள் முதலில் கைது செய்யப்பட்டனர்

குறித்த அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிசர பகுதியில் கடந்த மே மாதம் கைப்பற்றப்பட்ட 225 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை, அரசி மூடைகளில் பொதியிட்டது குறித்த அதிகாரிகள் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு போலீஸ் அதிகாரி தலைமறைவாகியுள்ளதுடன், அவருக்கு சொந்தமான 10 லட்சம் ரூபா பணம் மற்றும் துப்பாக்கியொன்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 12 அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் கைது

இலங்கையில் முன்னெடுக்கப்படும் பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இதுவரை 16 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பதில் போலீஸ் மாஅதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜுன் மாதம் 19ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 2 வேன்களும், ஜீப் வண்டியொன்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 3 கோடியே 12 லட்சம் ரூபா பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த அதிகாரிகள் கொள்வனவு செய்திருந்த காணிகளை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தற்காலிகமாக தடை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சில போலீஸ் அதிகாரிகளின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக முழு போலீஸ் திணைக்களமும் தவறானதாக கருத முடியாது என பிரதி போலீஸ் மாஅதிபர் குறிப்பிட்டார்.

அனைத்து நிறுவனங்களிலும் 5 முதல் 10 வீதமான ஊழியர்கள் இவ்வாறு இருக்கக்கூடும் என அவர் கூறினார்.

போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பல அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply