கந்தக்காடு சம்பவத்துடன் தொடர்புடைய புதிய தொற்றாளர்கள் 14 பேர் இன்றையதினம் தினம் ( இன்று மாலை 6 மணி வரை ) இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கைதியுடன் தொடர்புடைய 492 பேர் இது வரையில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 கட்டுப்படுவதற்கான விஷேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள 429 பேர் கந்தக்காடு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்திலிருந்தவர்களாவர். ஏனைய 47 பேர் அங்குள்ள நிர்வாகத்துறை அதிகாரிகளும் மேலும் 16 பேர் இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுமாவர் என்றும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு விஷேட செயற்பாட்டு மையத்தில் இன்று திங்கட்கிழமை விஷேட அறிவித்தலொன்றை விடுக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விஷேட அறிவிப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ,

வெலிக்கடை அல்லது கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் தொற்றுக்குள்ளான நபர் இனங்காணப்பட்டதன் பின்னர் அந்த பரவல் குறித்து அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளில் இராஜாங்களை பிரதேசம் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த பிரதேசம் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கiயில் இனங்காணப்பட்ட நோயாளரின் உறவினரது மரண வீடு மற்றும் மத சம்பிரதாயங்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது. ஏனைய நாடுகளைப் போன்று வைரஸ் பரவல் குறித்து இலங்கைக்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.

எனவே கடந்த மூன்று மாத காலமாக பின்பற்றி நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டியேற்பட்டுள்ளது. எனினும் கந்தக்காடு சம்பவம் போன்று நாடளாவிய ரீதியில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.

இராஜாங்கனை , வெலிகந்த உள்ளிட்ட சில பிரதேசங்களிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுகிறது என்றார்.

நேற்று மாலை 6 மணி வரை நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2631 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 1981 பேர் குணமடைந்துள்ளதோடு 639 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை 2251 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply