அடுத்த வருடத்திலிருந்து சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணிகளை இலங்கை இராணுவத்தினரிடம் கையளிப்பது தொடர்பில் அவதானம் செத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று(14) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன், பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுநிலை) மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்ர சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாதாரணமாக, சாரதி அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்வதற்காக 1,340 ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டியேற்படுவதுடன் சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையாக பணம், வருடாந்தம் வெளிநாட்டவர்களுக்கு உரித்தாவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இராணுவத்தினரால் குறைந்த செலவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுநிலை) மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இதன்போது தெரிவித்தார்.
இராணுவத்தினரால் செய்யமுடியாது என்று எதுவும் இல்லை எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிப்பதற்கு இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அதன்போது கருந்து தெரிவித்ததாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்ததாக குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.