மனைவியை சந்தேகப்படும் கணவன்மார் இப்போது அடிதடி என்று அல்லோலப்படுத்தாமல் அமைதியாக இருந்து, நவீன தொழில்நுட்பம் ஒன்றின் மூலமாக தங்கள் சந்தேகத்தை தீர்த்து, அது சரியா- தப்பா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

 

சந்தேகம் என்பது மனிதனுக்கு வந்துவிட்டால் அது, சந்தோஷத்திற்கு சாவு மணி அடித்துவிடும் என்பது உண்மைதான்.

ஆனாலும் ஆதிகாலத்தில் இருந்து இன்றும் மனிதர்களிடம் சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

பலநிலைகளில், பல துறைகளில் சந்தேகம் இருந்துகொண்டிருந்தாலும், கணவன்- மனைவி உறவு இடையேயான சந்தேகம் குடும்ப வாழ்க்கையை ஆட்டிப்பார்த்துவிடுகிறது.

மனைவியை சந்தேகப்படும் கணவன்மார் இப்போது அடிதடி என்று அல்லோலப்படுத்தாமல் அமைதியாக இருந்து, நவீன தொழில்நுட்பம் ஒன்றின் மூலமாக தங்கள் சந்தேகத்தை தீர்த்து, அது சரியா- தப்பா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

அப்படி ஒரு சந்தேகம் மும்பையை சேர்ந்த சந்தீப்புக்கு வந்தது. ‘உண்மை தெரியாமல் மனைவியை குற்றம் சொல்லக்கூடாது’ என்ற முடிவுக்கு வந்தவன்,

தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அதற்குரிய நவீன தொழில்நுட்பத்தை கையாளும் நிபுணர்களின் உதவியை நாடினான்.

அவர்கள் கொடுத்த ஆலோசனைபடி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்க முன்வந்தான். சந்தேகத்திற்குரிய மனைவியின் படுக்கை விரிப்பை உருவி எடுத்தான்.

காது குடையும் ‘பட்’ ஒன்றை எடுத்து தனது வாயில் நுழைத்து உமிழ்நீரை வழித்தான். இரண்டையும் அதற்குரிய வழிமுறையில் அட்டைப்பெட்டியில் அடைத்து ஐதராபாத்துக்கு கூரியரில் அனுப்பி வைத்தான்.

முழுமையான ஆய்வுக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சந்தீப்புக்கு பதில் வந்தது. “படுக்கை விரிப்பில் உள்ள ‘கறை’, நீங்கள் சந்தேகப்பட்டமாதிரியே விந்துக்கறைதான்.

அதன் டி.என்.ஏ.வும் உங்களின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போகிறது. இரண்டும் ஒன்றேதான்” என்றிருந்தது. அப்பாடா என்று அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் அவருக்கு முழுமையாக விலகியது.

“நான் மட்டும் இப்படி டி.என்.ஏ. டெஸ்ட் செய்திருக்காவிட்டால் சந்தேகமே எங்கள் வாழ்க்கையை நிலை குலைய வைத்திருக்கும்” என்கிறார் இந்த மும்பைவாசி.

இப்போது அவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசிக்கொண்டிருக்கிறது. இருவரும் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

உமிழ்நீரில் உள்ள டி.என்.ஏ. வையும் படுக்கை விரிப்பு விந்துக்கறை டி.என்.ஏ.வையும் ஒப்பிட்டு அவருக்கு ‘ரிசல்ட்’ கூறியது.

ஐதராபாத்தில் உள்ள ஒரு நவீன டி.என்.ஏ. ஆராய்ச்சி நிலையம். நிறைய பேருக்கு இது ஆச்சரியத்தை தரலாம்.

ஆனால் ஐதராபாத் ஆய்வகத்துக்கு ‘நன் நடத்தை சோதனை’ எனப்படும் இந்த சோதனைக்கு மாதந்தோறும் ‘சாம்பிள்கள்’ உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றன.

துரோகம் செய்யும் துணையைக் கண்டுபிடிக்க மேலைநாடுகளில் பிரபலமான இந்த டெஸ்ட், இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

“நாங்கள் இந்த ஆய்வகத்தைத் தொடங்கிய காலகட்டத்தில் ‘நடத்தைச் சோதனையில்’ ஆர்வம் காட்டுவோர் யாரும் இல்லை.

இன்றோ இந்த சோதனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று கூறுகிறார்கள்.

இவர்களது ஆய்வகத்துக்கு, பயன்படுத்திய ஆணுறை சிகரெட், பஞ்சு, உடல் ரோமம் அகற்றும் பட்டை, நாக்கு வழிப்பான், காது ‘பட்ஸ்’, நகத் துணுக்கு, ரத்தக் கறை படிந்த படுக்கைவிரிப்பு என்று பலவிதமான பொருட்கள் ஆய்வுக்கு வருகின்றன.

இந்த மாதிரியான ஆய்வகங்கள் எல்லா பெருநகரங்களை நோக்கியும் படையெடுக்கின்றன. டெல்லியிலும் இதே போன்ற மற்றொரு ஆய்வகம் இயங்குகிறது.

அங்கும் அதிகமான ‘சாம்பிள்’கள் வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சோதனைக்கு சாம்பிள் அனுப்பும் நபர்களில் பெரும்பாலானவர்கள், திருமணமான இளம் ஆண்கள்தான். மனைவி மீது சந்தேகம் கொண்டு, அதைச் சரிபார்க்குமாறு கூறுகிறார்களாம்.

இன்னும் சில வாழ்வியல் விஷயங்களுக்கும் இந்த ஆய்வுக் கூடங்கள் பயன்படுகின்றன. சிலர் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள்.

அதற்கான அடிப்படை காரணத்தை அறிவது முதல்- தலை முன்கூட்டியே வழுக்கை ஆகிவிடுமா என்பது வரை எல்லாவற்றையும் டி.என்.ஏ. சோதனை மூலம் அறியலாம். கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குத்தான் டி.என்.ஏ. பயன்படும் என்பது பழைய கதையாகிவிட்டது. பல புதிய விஷயங்களுக்கு இது பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

யாருக்கு சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்து அதிகம், பாதிப்பூட்டும் பரம்பரை வியாதி தமக்கும் வருமா என்று கூட கூறிவிடலாம் என்கிறார்கள் டி.என்.ஏ. ஆய்வு நிபுணர்கள்.

அவ்வளவு ஏன், உங்கள் குழந்தை கிரிக்கெட்டில் சச்சின் போலவோ, கால்பத்தில் பெக்காம் போலவோ ஜொலிக்க அவனது டி.என்.ஏ.விலேயே ‘பிராப்தம்’ இருக்கிறதா, எந்த விளையாட்டில் அவன் அசத்த வாய்ப்பிருக்கு என்று கூட புட்டுப்புட்டு வைத்துவிடுவார்களாம்.

தற்போது திருமணத்திற்கு ‘ஜாதகப் பொருத்தம்’ பார்க்கிற மாதிரி, ‘மரபணு பொருத்தம்’ பார்க்கவும் ஆரம்பித்திருக் கிறார்கள்.

இந்தப் பொருத்தமுள்ள இருவர் வாழ்க்கையில் இணையும்போதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வல்லவர்களாக இருப்பார்களா என்பதை அறிவதோடு, தம்பதியரின் தாம்பத்ய வாழ்க்கையும் ரொம்பவே திருப்திகரமாக அமையுமா என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப் பிருப்பதாக சொல்கிறார்கள்.

எல்லோருக்குமே அவரவர் மூதாதையர் பற்றி அறிய ஆவலாயிருக்கும். ஆனால் நம்மால் நமது தாத்தா-பாட்டி, அதைத் தாண்டினால் கொள்ளுத்தாத்தா- கொள்ளுப்பாட்டி வரை கூற முடியும். அதற்கு மேல் எதுவும் தெரியாது. அதற்கும் இது கைகொடுக்கும் என் கிறார்கள்.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் நடிகை பிரீடா பின்டோவுக்குக்கூட இந்தச் சோதனை செய்துகொள்ளும் ஆசை வந்திருக்கிறது.

“போர்த்துக்கீசியர்கள் நான் அவர்கள் வம்சாவளியில் வந்தவள் என்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே இந்தச் சோதனை செய்ய விரும்புகிறேன்” என்கிறார் பீரிடா.

நீங்கள் உண்மையில் ‘மண்ணின் மைந்தர்களா’ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களா என்றும் டி.என்.ஏ. கூறிவிடுமாம்.

எத்தனை உண்மைகளை கண்டுபிடித்து அதனால் எந்த நன்மைகள் விளைந்தாலும் ஒன்று மட்டும் புரியுதுங்க.. இந்த தொழில் சக்கைப்போடு போடப்போகுதுங்க..!

Share.
Leave A Reply