நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் புலஸ்தினி ராஜேந்ரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா கடந்த 2019 செப்டம்பர் மாதம் இள மஞ்சள் நிற கெப் வண்டியில், பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருடன் செல்வதைக் கண் கண்ட சாட்சியாளர் உள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சேவையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த நேற்று முன்தினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்ட போதே அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார்.

சாரா ஜெஸ்மின் அல்லது சாரா எனும் குறித்த பெண் கடந்த 2019 செப்டம்பர் மாதம் நாட்டிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்றுள்ளமை தொடர்பில் சந்தேகிக்கத்தக்க சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் இதன்போது சாட்சியமளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான புலச்தினி ராஜேந்ரன் அல்லது சாரா, களுவாஞ்சிக் குடியிலிருந்து  இந்தியாவுக்கு  தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, சாராவின் மாமாவை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

உண்மையில் கல்முனை – சாய்ந்தமருது வெலிவொலிவேரியன் பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடு ஒன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடத்தப்ப்ட்ட தற்கொலை தாக்குதலில் உயிர் தப்பியதாக நம்பப்படும் சாரா ஜெஸ்மின் எனும் பெண் களுவாஞ்சிக் குடி , மான்காடு பகுதியில் மறைந்திருந்ததாக கண் கண்ட சாட்சியாளர் ஒருவர் ஊடாக எனக்கு கடந்த 2020 ஜூலை 6 ஆம் திகதி தகவல் கிடைத்தது.

அதன்படி கடந்த ஜூலை 8 ஆம் திகதி நான் மட்டக்களப்பு சென்றேன். அங்கு சாராவை நேரில் கண்ட நபரையும் சந்தித்தேன்.

அந்த கண்கண்ட சாட்சியாளரின் சாட்சியத்தின் பிரகாரம், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், அதிகாலை 3.15 மணிளவில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் தேத்தாதீவு பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, பிரதான வீதிக்கு நுழைய முடியுமான குறுக்கு வீதியான கடற்கரை வீதியிலிருந்து பெண் ஒருவரும் இரு ஆண்களும் வந்துள்ளனர்.

அதனை குறித்த கண்கண்ட சாட்சியாளர் அவதானித்துள்ளார்.

அப்பெண் அப்போது கறுப்பு நிற பர்தா அணிந்திருந்ததாகவும், முகத்தை மறைத்திருக்கவில்லை எனவும் அவரின் பின்னால் இரு ஆண்கள் வந்ததையும் கண்டதாகவும் சாட்சியாளர் அவதானித்துள்ளார்.

அவ்வாறு பிரதான வீதிக்கு வந்த பெண், பாதை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இள மஞ்சள் நிற கெப் ரக வாகனத்தில் ஏறுவதை சாட்சியாளர் அவதானி த்துள்ளார்.

குறித்த கெப் வண்டியின் பின் ஆசனத்தில் அந்த பெண் அமர்ந்திருந்ததுடன் முன் ஆசனத்தில், அதாவது சாரதி ஆசனத்துக்கு அருகே உள்ள ஆசனத்தில் அப்போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி அபூபக்கர் இருந்துள்ளதை சாட்சியாளர் கண்டுள்ளார்.

தற்போது அபூபக்கர் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சி.சி.டி.யினரால் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.

இந்த கண்கண்ட சாட்சியாளர், பொலிஸ் அதிகாரியை சந்தேகித்து அவரிடம் விசாரிக்க தனது வாகனத்தை விட்டு இறங்கும் போதே, அந்த இள மஞ்சள் நிற கெப் வண்டி மட்டக்களப்பு பகுதியை நோக்கி வேகமாக சென்றது.

இதன்போது மேலதிக விசாரணையில், சாராவுக்கு படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல உதவிய இருவர் தொடர்பிலும் தகவல் கிடைத்தது.

அதில் ஒருவர் சாராவின் மாமா. அவர் சாராவின் தாயாரின் தங்கையின் கணவராவார். மற்றையவர் அவரது சகோதரராவார்.

கடந்த 2019 செப்டம்பரில் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு சாரா களுவாஞ்சிகுடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மூன்று இடங்களில் பதுங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.’ என சாட்சியாளர் இதன்போது குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply