ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன், டிக்கோயா தோட்டப்பகுதியில் வீடொன்றில் ஆண் சிசுவின் சடலமொன்று புதைக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று  (22.07) புதன்கிழமை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து குறித்த சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய ஹட்டன் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தோட்டபகுதிக்கு சென்று சிசு புதைக்கப்பட்ட பகுதியினை சுற்றிவளைத்து குறித்த சிசுவின் தாயின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து குறித்த சிசுவின் சடலத்தை வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருமணமான குறித்த பெண் 40 வயது மதிக்க தக்கவர் என்றும் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் இவர் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் தன் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் கொழும்பில் இருக்கும் போது வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக தான் கர்ப்பமடைந்தாகவும் கடந்த ஏழாம் திகதி குழந்தை இறந்து பிறந்ததனால் தான் சிசுவினை தோட்டத்தில் புதைத்ததாகவும் குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஹட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply