மூன்று மகன்கள் இருந்தும் அனாதையாகக் கை விடப்பட்டதால், உணவுக்கு வழியின்றி வயதான தம்பதி கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிப்பவர்கள் குணசேகரன் – செல்வி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தற்போது, 60 வயதாகும் குணசேகரன் கார்பென்டராகப் பணிபுரிந்தார். கொரோனா காரணமாக சமீப காலமாக வாட்ச்மேன் வேலைக்கும் குணசேகரன் சென்று வந்துள்ளார். இவர்களின் முதல் இரண்டு மகன்களும் திருமணமானபின் தாய் தந்தையரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு திருமணமாகவில்லை. இவர் மட்டும் பெற்றோருடன் வசித்தார்.
மதுவுக்கு அடிமையான ஸ்ரீதர் பணம் தேவைப்படும்போது மட்டும் வேலைக்குச் செனல்வார். மற்ற நேரங்களில் ஊர் சுற்றி திரிந்தார். ஊதாரித்தனமான இருந்துள்ளார். குடிக்கப் பணம் இல்லாதபோது வயதான தாய் தந்தையிடமும் பணம் கேட்டுச் சண்டையிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கொரோனா ஊரடங்கால் குணசேகரன் பார்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் பறிபோனது. இதனால், போதிய வருமானமில்லாமல் வறுமையால் வாடினர். கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழி இன்றி தவித்தனர்.
கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பித்தான் இரண்டு, மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலும் கடைசியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் நம் மக்களுக்கு உண்டு. ஆனால், குணசேகரன் – செல்வி விஷயத்தில் மூன்று மகன்களைப் பெற்றும் கடைசி காலத்தில் கைவிட்டு விட்டனர். முதல் இரண்டு மகன்களும் மனைவியுடன் சென்றுவிட, கடைசி மகனோ மதுவுக்கு அடிமையாகி சுமையாகிவிட்டான். இந்த நிலையில், கடிதம் எழுதிவைத்துவிட்டு, குணசேகரன்- செல்வி தற்கொலை செய்து கொண்டனர்.
இறப்பதற்கு முன்பு அவர்கள் எழுதிவைத்த கடிதத்தில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை காவல்துறையினர் தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று எழுதி வைத்துள்ளனர். மகன்களுக்குக் கொல்லிவைக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம், உதவி ஆணையர் சுரேந்தர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் முதியவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை செய்து வருகின்றனர். குணசேகரன்- செல்வி கடைசி விருப்பத்தின்படி, உதவி ஆணையர் சுரேந்தர் தலைமையில் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று மகன்களைப் பெற்றும், கடைசி காலத்தில் கைவிட்டதால், வயதான தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!