நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வெறுமனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற ஆதிக்கத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாது அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவும் அமைந்துள்ளது.

இம்முறையும் கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்கிதியின் பாராளுமன்ற வேட்பாளருமான ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக தற்காலிகமாக ஏற்படுத்திக்கொடுத்த வடக்கு கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் தேர்தல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை – இந்திய உடன்படிக்கை மூலமாக வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்பட்டது.

முழுமையாக கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதன் வலி இன்றும் உள்ளது. அவ்வாறான சூழலில் தான் நாம் அரசியலுக்கு வரவேண்டிய நிலைமையும் உருவாகியது.

அப்போது ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நேரத்தில் இலங்கை இந்திய உடன்படிக்கையை நீக்கி மீண்டும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை தக்கவைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய நாம் ரணசிங்க பிரேமதாசவை ஆதரித்தோம்.

அதன் மூலமாக அவர் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியான பின்னர் நாம் செய்த உதவியை மறக்கவில்லை.

அப்போதும் அவருக்கு பல அழுத்தங்கள், அவப்பெயர் ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் எமது தலைவர் ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட்டார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் போலவே அன்றும் ஏற்பட்டது. ஆனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அரச பலத்தை கையில் எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற்றது. ஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனமான செயற்பாடுகளையும் அதன் மூலமாக ஏற்பட்ட பிளவுகளையும் நாம் சுட்டிக்காட்டியாக  சஜிதை கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டணியாக செல்ல வேண்டும் என கூறினோம்.

அதனை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொள்ளாத போதிலும் எமது நோக்கம் வெற்றியளித்துள்ளது. நாம் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பலமான கூட்டணியாக பயணித்து வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றியாக வேண்டும், பொதுத் தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றால் இம்முறை பொதுத் தேர்தலில் பத்திற்கு குறையாத ஆசனங்களை நாம் எடுத்தாக வேண்டும்.

கடந்த முறை கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை நாம் கைப்பற்றினோம். அதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் பேசி ஒரு தீர்மானத்தை எட்டினோம்.

இம்முறையும் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்.

இப்போதே அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எனவே கிழக்கில் முஸ்லிம் ஆட்சியை தக்கவைக்கும் வியூகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவது  மட்டுமல்லாது மாகாண ஆதிக்கத்தையும் நாமே பெறுவதற்கான வியூகத்தையே அமைத்துள்ளோம்.

முஸ்லிம் சமூகம் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் எமக்கு பின்னால் இருந்து கூட ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை மதிக்கும் நிலைப்பாட்டில் இல்லை.

ஒரு சம்பவம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் மிகமோசமாக மாற்றியுள்ளது. எனவே நாம் பாதுகாப்பாக எம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply