லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்து பெய்ரூட் நகரம் முழுவதும் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்தது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்தது. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரமே அதிர்ந்து புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில், துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அறையில் முதல்கட்டமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதையடுத்து சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நடந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெடிவிபத்து 2 முறை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட துறைமுகத்தில் தற்போது தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த விபத்தில் தற்போதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான அவசர அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Lebanon #Beruit just few minutes back..Huge explosion.. pic.twitter.com/MvVqTNZ6Dk
— KK (@KKJKWARRIOR) August 4, 2020
மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இந்த விபத்து காரணமாக லெபனானில் நாளை தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டியுள்ளார்.
மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.