பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்குகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதே போல் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை. தமிழக ஆளுநர் புரோஹித், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றையடுத்து எஸ்.பி. பாலசுப்பரமணியம் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 3 நாள் சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் நான் வைத்தியசாலைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன்.
அதில் எனக்கு கொரோனா தொற்று சிறிதாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் என்னால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிவித்தேன். அதனையடுத்து நான் தற்போது வைத்தியாலையில் கொரோனாவுக்கான சிகிச்சைபெற்று வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.