கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் அனைத்து நாடுகளையும் முந்தி  ரஷ்யா, கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிட்ட உலகின் முதல் நாடாக தன்னை பதிவு செய்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி  நேற்று முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனம்  பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதன் போது  அவர் கூறுகையில், “ரஷியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்” என்றார்.

இதற்கிடையில் கொரோனா தொற்று பாதிப்பில் உலகின் நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யா ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ள  தமது தடுப்பூசியின் 3ஆவது கட்ட சோதனையை இன்று முதல் தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply