பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து 30பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கே முதலாவது பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கல்விகற்ற பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவன், இராஜாங்கனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரின் வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியிலேயே வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இரண்டாவது பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என தீர்மானிக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட இரண்டாயிரத்து 882 பேரில் இன்னும் 213 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply