தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்த மிக மூத்த தாத்தாவுக்கு வயது 116. அதெல்லாம் சரி. அவருக்கு இப்போது என்ன ஆனது?மன்னிக்கவும். சோகமான செய்திதான்.
அவர் இறந்துவிட்டார்.
அவர் 1904ஆம் ஆண்டு மே மாதம் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பிறந்தார் என்று அவரது அடையாள ஆவணங்கள் சொல்கின்றன.
ஆனால், அது கின்னஸ் உலக சாதனை அமைப்பால் சரிபார்க்கப்படவில்லை.
இவரது பதின்ம வயதில் தென்னாப்பிரிக்காவில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு வைரஸ் தொற்றி இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அதிலிருந்து மட்டுமின்றி இரண்டு உலகப் போர்களிலிருந்தும் நிறவெறியிலிருந்தும் இவர் தப்பிப்பிழைத்தார்.
2018ஆம் ஆண்டில் பிபிசியிடம் பேசிய ஃப்ளோம், தனது நீண்ட ஆயுளுக்கு ரகசியம் எதுவும் இல்லை என்று கூறினார்.
“ஒரே ஒரு விடயம் இருக்கிறது – அது நமக்கெல்லாம் மேலானவர் [கடவுள்]. அவருக்கு எல்லா சக்தியும் உள்ளது. என்னிடம் எதுவும் இல்லை. நான் எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடலாம், ஆனால் அவர்தான் என்னை இருகப் பிடித்து வைத்திருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
முதலில் ஒரு பண்ணையிலும் பின்னர் கட்டுமானத் துறையிலும் என தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு தொழிலாளியாகவே கழித்த ஃப்ளோம் 80 வயதுக்கு மேலானபோதுதான் ஓய்வு பெற்றார்.
மது அருந்தும் பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் விட்டுவிட்டாலும், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கடைசிவரை விடவே இல்லை.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்க அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், இவர் தனது 116ஆவது பிறந்தநாளில் தனக்கு வேண்டிய சிகரெட்டுகளை உருவாக்க தேவையான புகையிலையை வாங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) கேப்டவுனில் இயற்கையான காரணங்களால் ஃப்ளோம் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“இரண்டு வாரங்களுக்கு முன்புவரை கூட தாத்தா விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அவர் ஒரு வலிமையான மனிதர், பெருமை நிறைந்தவர். அவரது இறப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்குமென்று குடும்பத்தினர் கருதவில்லை” என்று அவரது குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே நாயுடு ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.