இந்தியாவில் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையின் பிரபல நிழலுலக தாதாவான அங்கொட லொக்காவின் மற்றுமொரு பிரதான துப்பாக்கித்தாரி ஒருவர் போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை, போலீஸார் அழைத்து செல்லும் சந்தர்ப்பத்தில் போலீஸாரிடமிருந்து துப்பாக்கியை பறிக்க அவர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, துப்பாக்கி செயற்பட்ட நிலையில், போலீஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து, தமது பாதுகாப்பை கருத்திற் கொண்டு பதில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலீஸார் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்திலேயே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹரிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதான சமியா என அழைக்கப்படும் சமிந்த சந்தமால் எதிர்சூரிய என போலீஸார் கூறுகின்றனர்.

சொல்டா கடந்த வாரம் போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழப்பு

அங்கொட லொக்காவின் துப்பாக்கித்தாரிகளின் பிரதான சந்தேகநபராக சொல்டா என்றழைக்கப்படும் அசித்த ஹேமதிலக்க போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்திருந்தார்.

முல்லேரியா – சந்திரிகா குமாரதுங்க மாவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட ஆயுதங்களை காண்பிப்பதற்காக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபரை அழைத்து சென்ற வேளையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

சந்தேகநபர் போலீஸார் மீது கைக்குண்டொன்றை வீசுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக போலீஸார் கூறியிருந்தனர்.

இந்தியாவில் அண்மையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் பிரபல நிழலுலக தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்களான சொல்டா மற்றும் சமியா ஆகியோர் கடந்த இரு வாரங்களுக்குள் போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், மனித படுகொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நிழலுலக குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த காலப் பகுதியில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply