ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

விஜயராமயில் உள்ள அவரின் இல்லத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை சென்ற அதிகாரிகள் தற்போது முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரின் வீட்டிற்கு பொலிஸ் குழு சென்றுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து கடந்த நல்லாட்சி அரசாங்தின்போது இந்த தாக்குதல் குறித்து ஆராய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், புலனாய்வு அதிகாரிகள் என பலர் சாட்சியம் வழங்கினர்.

விசாரணையின்போது, இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பாக ரணில்- மைத்திரி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லையென பலர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply