தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று நாடாளுமன்றில் குறிப்பொன்றை சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றத்தின் ஹன்சாட்டில் உள்ளடக்குமாறு கோரியிருந்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின்போது ‘தமிழ் மக்களே இலங்கையின் முதல் குடிகள்’ என்ற தனது கருத்துக்கு ஆதாரமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் தயாரித்த குறிப்பினையே அவர் சமர்ப்பித்தார்.

இந்தக் குறிப்பு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முகவுரையாக உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் தமிழர் குடிநிலை குறித்து அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் வருமாறு, “தமிழ் மொழியினதும் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினதும் தொன்மை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்துவந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக் கற்காலம், பெருங் கற்கால மக்களின் கலப்பில் இருந்து தோன்றியவர்கள்.

இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன்பு 28 ஆயிரம் வருடகால நீண்டகால இருப்பைக் கொண்டது. பெருங்கற்கால கலாசார மக்கள் திராவிடர்கள் என்று முன்னைய தொல்பொருளியல் ஆணையாளர் செனரத் பரணவிதானவால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.

இவர்கள் தென் இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து கிறிஸ்துவுக்கு முன்பு 800ஆம் ஆண்டளவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் ஆவார்கள். இவ்விரு சாராரும் ஒன்றிணைந்ததானது ஒரு நீண்டகால செயற்பாடாகும். இந்த ஒன்றிணைதலானது ஆரம்ப சரித்திர காலமான கி.மு. 250 தொடக்கம் கி.பி. 300 வரையிலான காலத்திலேயே முழுமையடைந்தது.

பெருங்கற்கால கலாசாரமானது நாகர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாகவும் வாணிபம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி உபகண்டத்தில் தமிழ் நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த மக்களுடன் பேசும்போது பிராகிருத மொழியை தொடர்பாடல் மொழியாகப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி இலங்கையின் பல பாகங்களில் தமிழ் ப்ராமி எழுத்துப் படிவங்களில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் காணப்பட்டதாகவும், கல்மேடைகளில் (Dolmens) தமிழ்மொழி காணப்பட்டதாகவும் மற்றும் பல பிரேத அடக்க அல்லது தகன இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களிலும் தமிழ் மொழி காணப்பட்டதாகவும் அறியத்தந்துள்ளனர்.

இவற்றில் நாகர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் வேள் எனப்படும் மக்கட் தலைவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. பெருங்கற்கால கலாசாரத்துடன் தமிழ் மொழிக்கு கிட்டிய உறவு இருப்பதை வைத்து பெருங்கற்காலம் அறிமுகப்படுத்தப்பட்ட காலமான கி.மு. 800ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மொழியானது இந்த நாட்டில் பேசப்பட்டு வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

தமிழ் ப்ராமி பொறிப்புக்களைக் கொண்ட மனித கைத்திறன் கொண்டு உண்டாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உருப்படிகள் பல வகையாகவும் பல இடங்களிலும் காணப்பட்டுள்ளன. அவை மட்பாண்டத் துண்டுகளிலும், எண்ணை அழுத்திகள், உரல்கள், அம்மிகள், முத்திரைகள், உலோகத்தால் மற்றும் களிமண்ணிலாலான விளக்குகளில் காணப்படுகின்றன. மற்றும் சைவம், நாக மரபு, பௌத்தம் ஆகியன சம்பந்தமான வழிபாட்டு, பூசைச் சின்னங்கள் போன்றவற்றிலும் காணப்படுகின்றன.

மேலும், குன்றுகளில், கற்பாறைகளில், வயல் வெளிகளில், வனங்களில், சுவர்களில், சமயசார்பற்ற மற்றும் சமய ரீதியான நினைவுச் சின்னங்கள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன. பலவிதமான சான்றுகளில் இருந்தும் அவை காணப்பட்ட பலதரப்பட்ட இடங்களில் இருந்தும் இந்நாட்டில் பிரதேச ரீதியாகப் பக்கம் பக்கமாக உள்ள சுமார் நாலில் ஒரு பங்கு நிலத்தின் மீது தமிழ்மொழி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்று காணக்கூடியதாக உள்ளது.

அரும்பொருள் விளக்கம்:
கற்காலம் – மூன்று பிரிவுகள் உண்டு. அவையாவன,
1. பழங் கற்காலம் (Paleolithic) – கி.மு. 30000 தொடக்கம் கி.மு. 10000 ஆண்டுகள் வரையில்
2. மத்திய கற்காலம் (Mesolithic) – கி.மு. 10000 தொடக்கம் கி.மு. 800 ஆண்டுகள் வரையில்
3. புதிய கற்காலம் (Neolithic) – கி.மு 800 தொடக்கம் கி.மு. 300 வரையில்
மத்திய கற்காலத்தில் கைபிடியுடனான கல்லால் ஆன Megalithic கருவிகள் பாவிக்கப்பட்டன.

திராவிடர்கள் – கிமு 20ஆம் நுற்றாண்டில் இருந்து 11ஆம் நூற்றாண்டு வரையில் இந்திய உபகண்டத்தில் பெரும்பான்மைக் குடிகளாக வாழ்ந்தவர்கள்.

புராதன சரித்திர காலம் – கி.மு 6ஆம் நூற்றாண்டில் இருந்து 4ஆம் நூற்றாண்டு வரை நாகர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள்.

ப்ராகிருதம் என்பது இந்தியாவின் ஆதியிலும் மத்திய காலத்திலும் பேசப்பட்ட பேச்சு மொழியாகும். அத்துடன் ப்ராமி எழுத்துப் படிவம் ஆதித் தமிழ் எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்துப் படிவமாகும். (இதற்கு கீழடியில் காணப்பட்ட வைகைப் பள்ளத்தாக்கு நாகரிகம், சிந்துநதிப் பள்ளத்தாக்கின் நாகரிகம் போன்றவற்றைப் படிக்கவும்)

மேலும், சான்றாக டொல்மன் கல்லால் ஆன மேடை மரணம் சார் நினைவுச் சின்னங்கள், புதைத்தல் மற்றும் தகனம் போன்றவற்றைச் செய்தபோது வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன.

Share.
Leave A Reply