முல்லைத்தீவில் திடீரென காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது. இந்நிலையில், சிலாவத்தை பகுதியில் வீதி ஓரத்தில் நின்ற மரம் முறிந்து வீழ்ந்தபோது அவ்வீதியால் பயணித்த இருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் முள்ளியவளை மாஞ்சோலையில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply