யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.
இன்றைய தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானைப் பக்தி பூர்வமாகத் தரிசித்தனர். இந்நிலையில், மகோற்சவத்தின் பெருந்திருவிழாவான தீர்த்தோற்சவம் நாளை காலை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கொரோனா நெருக்கடி காரணமாக இம்முறை தாகசாந்தி, அன்னதானம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.