நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது.

புதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான செய்தி. சீ.வி. விக்னேஸ்வரன் சொன்னதும், அதற்கான சிலரின் ஆதரவும் சிலரின் எதிர்வினைகளும் சிலரின் பட்டவர்த்தனமான மௌனங்களும் அவர்களது உண்மை முகங்களைக் கொஞ்சம் வௌிச்சத்தில் காட்டுவதாக அமைந்துவிடுகிறது.

எல்லோரும் பரபரப்பாகும் அளவுக்கு, நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் அப்படி என்னத்தைச் சொல்லிவிட்டார்? நாடாளுமன்றத்தில் தனது உரையைத் தமிழில் ஆரம்பித்த அவர், “இலங்கையின் ஆதிக்குடிகளின் மொழியில் பேசுகிறேன்” என்றார். இதுதான், இத்தனை பரபரப்புக்கும் காரணமான பேச்சு.

கட்சிபேதமில்லாமல் சிங்கள-பௌத்த தேசியவாதிகள் சீ.வி.விக்னேஸ்வரனின் இந்தப் பேச்சைக் கண்டித்து வருகிறார்கள்.

அத்தனை கண்டனங்களைப் பெறுமளவுக்கு இந்தப் பேச்சு, பிழையான பேச்சா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், இலங்கையின் அரசியல் பற்றியும் சிங்கள-பௌத்த இனத்தேசியவாதம் பற்றியும் இன்னும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது என்று அர்த்தம்.

இலங்கையின் புகழ்பூத்த வரலாற்று ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவரான கே.எம். டி சில்வா, இலங்கையின் பெரும்பான்மையினத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “சிறுபான்மையினரின் மனோநிலையைக் கொண்ட பெரும்பான்மையினர்” என்பார்.

சிறுபான்மையினருக்கு, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், தமது அதிகாரமும் பலமும் குறைவாக இருக்கும் என்பதால், தம்முடைய இருப்புப் பற்றிய அச்சமும் பாதுகாப்பின்மையும் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.

இந்தப் பாதுகாப்பின்மை உணர்வு, அவர்களை எப்போதும் ஓர் அதீத தற்பாதுகாப்பு நிலையில் நிற்கவைத்திருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், இந்தச் சிறுபான்மை மனநிலை, பெரும்பான்மையினத்திடம் இருப்பதாக கே.எம். டி சில்வா கருத்துரைக்கிறார்.

தமது இருப்பு, அடையாளம் பற்றிய பாதுகாப்பின்மை உணர்வால், அவர்கள் அதிதீவிர தற்பாதுகாப்பு மனநிலையில் செயற்படுவார்கள்.

பொதுவாக, அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்புகளைச் சிறுபான்மையினர்கள்தான் வேண்டி நிற்பார்கள்.

பெரும்பான்மையினர் ஆதிக்கமுள்ள நாடொன்றில் தமது மொழி, மதம், கலாசாரம், அடையாளம் என்பவற்றைப் பாதுகாக்கவும் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் இந்த அரசமைப்பு, சட்டப்பாதுகாப்புகள் அவசியம் என்று சிறுபான்மையினர் உணர்கிறார்கள்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, இந்தப் பாதுகாப்புகளைப் பெரும்பான்மையினத்தவரே பெரிதும் வேண்டி நின்றிருக்கிறார்கள்.

தமது மதத்துக்கும் மொழிக்குமான பாதுகாப்பு, முன்னுரிமையை அரசமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முன்வைப்பதில் அவர்களே கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றிக் கருத்துரைக்கும் இன்னொரு வரலாற்றாய்வாளரான நீரா விக்கிரமசிங்க, பெரும்பான்மையின அடையாளங்களைப் பாதுகாப்புப் பொறிமுறைகள் மூலம் ஒன்றுபடுத்தியமையைத்தான் பலரும் சிறுபான்மையின மனநிலையையுடைய பெரும்பான்மையினம் என்று விளிக்கக் காரணம் என்கிறார்.

சீ.வி.விக்னேஸ்வரனின் பேச்சு, இந்தச் சிறுபான்மையின மனநிலையையுடைய பெரும்பான்மையினத் தேசிய அரசியலின் மிக முக்கியமான பாதுகாப்பின்மை உணர்வை உந்தியெழச் செய்ததுதான் அவர் சொன்ன ஒரு வரி.

நிற்க! இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தாம்தான் என்று நிறுவுவதே ‘சிங்கள-பௌத்த’ இனத்தேசியவாதம் முன்னெடுத்த முக்கிய பணியாக இருந்து வருகிறது.

ஆனால், அவர்கள் வரலாறு என்று நம்பிய வரலாறே, அவர்களுக்கு உதவுவதாக இல்லை என்பதை, அண்மைக்காலங்களில் வெகுவாக உணர்ந்ததன் விளைவுதான், இன்று புதிய வரலாறுகளைத் தேடி அவர்கள் பயணித்துக் கொண்டிருப்பதன் காரணம்.

இன்றும் கூட, மகாவம்சம்தான் சிங்களவர்களின் வரலாறு. ஆனால், அது சிங்கள இனத்தின் தோற்றத்தை, விஜயனின் வருகையோடு தொடங்குகிறது.

வங்கம், ஒடிசாவிலிருந்து வந்த இளவரசன் விஜயன். கி.மு 543 காலகட்டத்தில் இலங்கைத் தீவை வந்தடைகிறான்.

விஜயன் வங்காளி; அவன் மணம்புரிந்தது மதுரை இளவரசி. அவர்களது சந்ததியினரே சிங்களவர்கள் எனப்பட்டார்கள்.

இதற்கும் சில நூற்றாண்டுகள் கழித்துத்தான் பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. அப்படியானால் விஜயனுக்கு முன் இந்தத் தீவில் வாழ்ந்தவர்களை மகாவம்சம் கூறுவது போல இயக்கர்கள், நாகர்கள் என்று குறிப்பிடுவதுடன் வரலாறு கைவிடப்பட்டுவிடுகிறது.

அவர்கள் பேசிய மொழி என்ன, அவர்களது அயல்நாடுகளுடன், அவர்கள் கொண்டிருந்த உறவு என்ன என்பதெல்லாம் பற்றி பேசப்படுவதில்லை.

ஆதி தமிழ், 5,000 ஆண்டுகள் அளவுக்குப் பழைமையானது என்று குறிப்பிடும் மொழியியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

எது எவ்வாறாயினும், கி.மு.300களில் செழுமையான இலக்கியங்களைக் கொண்ட மொழியாகத் தமிழ் இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் உண்டு.

இந்த வரலாற்று விடயங்கள் எல்லாம்தான், இன்று “இராவணன் சிங்களவன்” என்கிற புதிய புனைவுக்குச் சிங்கள-பௌத்த தேசியவாதிகளை இழுத்துச் சென்றிருக்கிறது.

விஜயனின் கதை அவர்களுக்கும் போதுமான பயன்தரு கடந்தகாலத்தைத் தரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நிற்க!

யார் முதலில் வந்தார்கள், யார் வந்தேறு குடிகள் என்பதெல்லாம் அவசியமில்லாத விடயங்கள். இன்றைப் பற்றிப் பேசுவோம் என்று சிலர் கருத்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் அர்த்தமில்லாமல் இல்லை.

ஆனால், கடந்த தேர்தலின் பின்னர், இலங்கை அரசியலின் களம் மாறியிருக்கிறது என்பதை, ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த தேர்தலில், தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்தவர்கள் சிங்களவர்களோ, தமிழர்களோ அல்ல; மாறாக, இன அடையாளங்களைக் கடந்து, தாராளவாதிகள் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

சீ.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்குக் கங்கணம் கட்டிக்கொண்டு கண்டனம் வௌியிட்டவர்கள் ராஜபக்‌ஷக்கள் அல்ல; மாறாக, சஜித் பிரேமதாஸவின் கட்சியைச் சார்ந்தவர்கள். அவர்களே, ராஜபக்‌ஷ தரப்பை விடக் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருக்கிறார்கள்.

எங்களில் யார் மிகப் பெரிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதி என்ற போட்டியில், ராஜபக்‌ஷக்களை வீழ்த்த, சஜித் பிரேமதாஸ தரப்பு, படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக, கஜேந்திரகுமார் மட்டுமே நின்றார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தீவிர தமிழ்த் தேசியவாதிகள் எனப்பட்ட இந்த இருவரும்தான் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.

சஜித் பிரேமதாஸ தரப்பில், அவருக்கு ஆதரவாக இருந்த தமிழ் அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கிறார்கள்.

அவர்கள், தமிழ்த் தேசியவாதிகள் அல்ல; ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அமைதியாகவே இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது. இனத் தேசியவாதச் சண்டைகளுக்குத் தாம் தயாரில்லை என்ற நிலைப்பாட்டை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளது போலும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியலில் தாராளவாத அரசியல் முகமாகத் தன்னை முன்னிறுத்தி உள்ளது. ‘பெடரல் பார்ட்டி’, ‘லிபறல் பார்ட்டி’யாக மாறியுள்ளது.

ஆனால், இந்தப் போட்டியில் ‘லிபறல்’களுக்கு இடமில்லை. இது இனத்தேசியாவதிகளுக்கும் இனத்தேசியவாதிகளுக்கும் இடையிலான போர். 2020 நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் அரசியல் களத்தை மீண்டும் இனத்தேசியவாதங்களுக்கு இடையிலான சண்டையாக மாற்றியுள்ளது.

இது ஆரோக்கியமானதொன்றல்ல. இலங்கை அரசியல் சந்தர்ப்ப சூழல்சார்ந்து கொலனித்துவ காலகட்டத்திலேயே இன ரீதியில் பிளவடையத் தொடங்கியது.

சுதந்திரத்துக்குப் பின்னர், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மையின முன்னுரிமை, என்ற இனப்பிளவு அரசியல், சுதந்திர இலங்கையில் இனத்தேசிய அரசியலாக உருவெடுத்து, ஆயுதப்போராட்ட காலத்தைச் சந்தித்து, இன்று ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“இலங்கையின் இனத்தேசிய அரசியலின் விளைவாக, வளமடையும் சாத்தியமுள்ள நாடு வீணாவதைக் கண்டேன்” என்று சிங்கப்பூரின் சிற்பி லீ க்வான் யூ பதிவுசெய்த கருத்து இங்கு முக்கியமானது.

இங்கு, சீ.வி.விக்னேஸ்வரனை அரசியல் காழ்ப்புணர்வின் காரணத்தால் குறைசொல்வது பொருத்தமானதல்ல. அவர் சொன்னது, அவசியமா என்பதை விட. அதைச் சொல்வதற்கு, அவருக்கு இருக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது.

பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் மனநிலையில் செயற்படும்போது, சிறுபான்மையினர் சிறுபான்மையினருக்கேயுரிய பாதுகாப்பின்மையின் காரணத்தால், தமது அடையாளத்தையும் இருப்பையும் பாதுகாத்துக்கொள்ள அதே மனநிலையில் செயற்படுவதில் எப்படிப் பிழை காண்பது?

இந்தத் தீவில் இனத்தேசிய அரசியல் தமிழ் மக்களால் தொடங்கப்படவில்லை. தமிழ்த் தேசியம் என்பது, ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுவது போல, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்புத் தேசியமாகவே பிறந்தது.

இங்கு இனத்தேசியம் இல்லாதுபோய், சிவில் தேசியமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால், அதற்கான முதற்படியை பெரும்பான்மையினமே நல்லெண்ணம் கொண்டு முன்னெடுக்க வேண்டும். அந்த முன்னெடுப்புக்குக் கைகொடுக்கத் தமிழ்த் தேசியத்தின் தாராளவாதிகள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள்.

-என்.கே. அஷோக்பரன்-

Share.
Leave A Reply