இலங்கையின் இனப்பிரச்சினை புரையோடிப் போயிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எண்ணற்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. உள்ளூரில் பேசப்பட்டன. வெளிநாடுகளில் பேசப்பட்டன. இந்தப் பேச்சுக்கள் பல நேரடி பேச்சுவார்த்தைகளாக அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் இடம்பெற்றிருந்தன.
அதேநேரம் மறைமுகப் பேச்சுக்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
இவற்றைவிட, அரசாங்கம் தானே இந்தப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்காகப் பாராளுமன்றத் தெரிவுக்குழுஒன்றை நியமித்து, விடயங்களை ஆராய்ந்திருக்கின்றது.
இதையும் விட இலங்கை அரச தலைவர்களினால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி மாநாடுகள், மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுஒன்றும் அரசியல் தீர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
விடுதலைப் புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் அழுத்தத்தின் பயனாக இலங்கை அரசாங்கமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தைகளே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகக் கடைசியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளாகப் பதிவாகியிருக்கின்றது.
ஒரு வருட காலம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை செல்லுபடியற்றது. அதிகாரமற்றது எனக் கூறி, அரசாங்கத் தரப்பினரே பேச்சுக்களில் இருந்து விலகிக்கொண்டார்கள்.
நேரடி பேச்சுவார்த்தைகளுக்குஇடமேஇல்லை. பேச்சுவார்த்தைக்கென களமாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அந்தக் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்குபற்றி, பேச்சுக்களுக்குவரவேண்டும். நேரடியாகப் பேச முடியாது.
அத்தகைய பேச்சுக்களின் மூலம் பிரச்சினைக்கு அரசு தனித்து தீர்வு காண முடியாதுபாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்ற ஒரு மன்றத்திலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று அரசாங்கம் பிடிவாதமாக இருந்தது.
ஆனால், நேரடியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட பல விடயங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என குற்றம் சுமத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அடிப்படை விடயங்களில் கூட்டமைப்பும் அரசாங்கமும் முதலில் ஓர் உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
அந்த உடன்பாட்டை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து பேச்சுக்கள் நடத்தி முடிவு செய்யலாம் என்ற தனது நிலைப்பாட்டை உறுதியாகக் கூறியிருந்தது.
அது மட்டுமல்லாலல் தொடர்ந்து அது, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கின்றது.
இப்போது திடீரென பேச்சுவார்த்தைகள் பற்றிய பேச்சுக்கள் பரவலாக அடிபடுகின்றன. அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்றது. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புதான் தயாராக இல்லை என்று அரசாங்கம் கூட்டமைப்பின் மீது பழிபோட்டிருந்தது.
அத்துடன் பேச்சுக்கள் நடத்த வேண்டும் அரசாங்கம் அதற்கு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
ஆயினும் பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவே அவ்வப்போது கூட்டமைப்பு கூறி வந்திருக்கின்றது. இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தைகளுக்குத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்னையில் இருந்து வெளிவருகின்ற இந்து பத்திரிகையுடனான நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார்.
அதுவும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியே பேச்சுக்கள் நடத்தத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். வடமாகாண சபைக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து நீண்ட காலமாவே சர்ச்சைகள் நிலவி வந்திருக்கின்றன.
காணி அதிகாரம் கொடுக்க முடியாது. பொலிஸ் அதிகாரத்தையும் வழங்க முடியாது என்று அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. இரண்டுமே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களாகக் காட்டுவதற்கான முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு கிழக்கு பகுதிகளானது, தமிழர் தாயகப் பிரதேசம் என்பது தமிழர் தரப்பு நிலைப்பாடு. இரண்டு மாகாணங்களும் இணைந்த நிலையில், அங்கு தாங்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தமிழர் தரப்பின் கோரிக்கை.
ஆனால் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால், வடக்கு கிழக்கு இணைந்த ஒரு பிரதேசத்தில் தமிழர்கள் தமக்கென தனிநாடு ஒன்றை உருவாக்கிவிடுவார்கள் என்றதோர் அச்சம் மிகுந்த ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அத்தகைய நிலைமைகள் உருவாகாமல் இருப்பதற்கான முயற்சிகளை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் காரணமாகவே ஒரே நிர்வாக அலகாக இருந்த வடக்கு கிழக்கு தனித்தனி மாகாணங்களாக நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாகாணங்களாக – இரண்டு மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், அந்தப் பிரதேசத்தைத் தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசம் என்று தனித்துவமாக உரிமை கோர முடியாதவாறு, அந்தப் பிரதேசங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆட்சியிலிருப்பவர்கள் மேற்கொண்டு வந்திருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கமும் அதனை அடியொட்டி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், காணி அதிகாரங்களை வடமாகாண சபையிடம் வழங்கினால் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள முடியாமல் போய்விடும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இதற்காகத்தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைவாக வடமாகாண சபைசெயற்படக் கூடியதாக இருந்தாலும்,அதனை அவ்வாறு செயற்படவிடாமல் தடுப்பதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது.
இதன் ஓர் அம்சமாகவே, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, மாகாண சபையை உருவாக்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்வதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும், இந்த அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
ஆனால், இந்தியாவின் தலையீட்டையடுத்து, அந்தமுயற்சியை அரசாங்கம் தற்காலிகமாகக்கைவிட்டு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தியிருந்தது. இப்போது அந்தத் திருத்தச் சட்டத்தைப் பற்றி பேச்சுக்கள் நடத்தலாம் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
வடமாகாண சபையின் நிலைமைகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் அவர்களே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பெரும் தடையாக இருப்பதாகவும், கூறி வந்த அரசாங்கம், யுத்தம் முடிவுக்கு வந்ததும் நடத்தப்படுகின்ற தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்கள் நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இதன் மூலம், அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு – பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருந்த விடுதலைப்புலிகள் அரங்கத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தார்கள். தேர்தல்களும் நடத்தப்பட்டன.
பல்வேறு சாதக பாதக நிலைமைகளுக்கிடையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் கூட்டமைப்பினரையே தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்தனர். எனினும் வாக்களித்திருந்தபடி, அரசாங்கம் அவர்களுடன் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தானாக முன்வரவே இல்லை.
இந்தியா உள்ளிட்ட வெளி அழுத்தங்களுக்குப் பணிந்து, அரசு கூட்டமைப்புடனான பேச்சுக்களை நடத்துவதாகத் தெரிவித்து, ஒரு வருட காலத்திற்கு இழுத்தடித்து, ஓர் ஏமாற்று நாடகத்தை நடத்தியிருந்தது.
ஆனால், இப்போது வடமாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, சுமார் ஒரு வருட காலம் நிறைவடையப் போகின்ற நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரசவமே மாகாண சபை முறைமையாகும். இந்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாதவாறு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வடமாகாண சபையின் நிர்வாகச் செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக முடக்கி வருகின்றது.
சாதாரண விடயங்களைக்கூட வடமாகாண சபை முன்னெடுக்கவோ அல்லது அந்த நடவடிக்கைகள் தொடர்பான வேலைத்திட்டங்களையே செயற்படுத்தவோ முடியாதவாறு பல்வேறு வழிகளில் அரசாங்கம் தடைகளைப் போட்டுள்ளது.
இதற்கு முக்கிய கருவியாக வடமாகாண ஆளுநரையும், அதற்கு உதவியாக மாகாண சபையின் பிரதம செயலாளரையும் அரசாங்கம் தாராளமாகப் பயன்படுத்தி வருகின்றது.
வடமாகாண சபைக்கு அரசாங்கத்தினால் முறைப்படி ஒதுக்க வேண்டிய நிதியை முழுமையாக அரசாங்கம் இன்னும் ஒதுக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
வடமாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தின் போது, அந்த மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, அந்த மாகாண சபைக்கு இப்போதுள்ள நிதிக்கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ள நிதி போதுமானதல்ல என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தியிருந்தார்.
வடமாகாணம் – விசேடதேவைக்குரிய மாகாணம்
வடமாகாணம் என்பது விசேட தேவைக்கு உட்பட்ட பிரதேசமாகும். மனிதர்களில் விசேட தேவைக்கு உட்பட்.டவர்களை, சாதாரண மனிதருடன் ஒப்பிட்டு நடத்துவதில்லை.
அவர்களின் விசேட தேவைகள் கவனத்திற் கொள்ளப்பட்டு, அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதுண்டு. வெறும் மனிதாபிமானத்திற்காக இது செய்யப்படுவதில்லை.
மனிதாபிமானத்தைக் கடந்த நிலையில் அவர்களுடைய நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு. அவர்களுக்குரிய உரிமையாகவே அந்த வசதிகள் செய்யப்படுகின்றது. சக்கர நாற்காலிகளில் செல்கின்ற விசேட தேவைக்கருதியே, பொதுச் சேவைகளை வழங்குகின்ற அரச கட்டிடங்களில் ரயில் நிலையம் போன்ற போக்குவரத்து நிலையங்களில் அவர்களுக்கான விசேட பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
விழிப்புலனற்ற விசேட தேவைக்கு உட்பட்டவர்களின் உரிமைகளை மதிப்பதன் காரணமாகத்தான், பெருந்தெருக்களில் கூட அவர்கள் இலகுவாக நடந்து செல்லத்தக்க வகையிலான நடைபாதைகள் நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வகையில்தான் வடமாகாண சபையின் விசேட தேவைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு, அதற்கான அதிகாரங்களை வழங்கி, நிதி வசதிகளையும் அரசாங்கம் செய்திருக்க வேண்டும்.
ஏனெனில் நீண்ட காலமாக அங்கு சிவில் நிர்வாகம் சீராக நடைபெற்றிருக்கவில்லை. யுத்தம் காரணமாக அந்தப் பிரதேசத்தின் சகல கட்டமைப்புக்களும் நிர்மூலமாகியிருக்கின்றன. மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கை முறைமைகள், வாழ்விடங்கள், என பல வழிகளிலும் அந்தப் பிரதேசம் சீரழிந்து கிடக்கின்றது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்அங்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கம் பொது வசதிகளை மேம்படுத்தியிருக்கின்றது என்பது உண்மைதான். உட்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் அங்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் யானைப் பசிக்கு சோளப் பொரி போட்ட வகையிலேயே இருக்கின்றன. அந்தப் பிரதேசத்தினதும் அங்குள்ள மக்களினதும் தேவைகள் அதிகம். அவற்றைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் செயற்பாடுகள் இன்னும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான், 5831 மில்லியன் ரூபாவை வடமாகாண விருத்திக்கு நாம் ஒதுக்கியுள்ளோம் என்று கூறி விட்டு 1876 மில்லியன் ரூபாவை மட்டும் அரசாங்கம் வடமாகாண சபைக்குத் தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருக்கின்றார். மிகுதியான 3955 மில்லியன் ரூபாவை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து செலவு செய்து கொண்டிருப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை எவ்வாறு எதற்கு செலவு செய்யப்படுகின்றது என்பதை வடமாகாண சபைக்கு அரசாங்கம் தெரிவிக்காமலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், அரசாங்கம் வடமாகாண சபைக்கு பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது,
அந்த நிதியை வடமாகாண சபையை நிர்வாகம் செய்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் செலவிடுவதில்லை என அரச ஊடகங்களின் ஊடாக எதிர்ப் பிரசாரத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பத்து வீதத்தைக் கூட அவர்கள் செலவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல வாராந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வாய் கூசாமல் கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தின் இந்தப் போக்கானது, தமிழ்ப்பேசும் மக்களின் ஆதங்கங்களை, அபிலாஷைகளை, ஆசைகளை, எதிர்பார்ப்புக்களை அடியோடு சாய்த்துத் தமது கரவான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மெருகூட்ட விழைவதை எடுத்துக் காட்டுகின்றன.
இதற்கு எம்மவர்களில் சிலர் ஒத்தூதுவது வருத்தத்தைத் தருகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கூட்டமைப்பும் பேச்சுக்குத்தயார், ஆனால்…….ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டமைப்பினர்தான் தன்னுடன் பேசுவதற்கு வருகின்றார்களில்லை. ஆனால் தான் தயராக இருப்பதாகத் தெரிவிப்பதற்கு முன்பே, வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் வைத்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அர்த்தமுள்ள ஒரு பேச்சுவார்த்தைக்குக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என கூறியிருந்தார்.
பேச்சுவார்த்தையானது, தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றியதாக, அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகளை சுதந்திரமாக உறுதி செய்யத்தக்க ஒரு தீர்வைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது தமிழர் தரப்பின் நிலைப்பாடாகும்.
முன்னைய சந்தர்ப்பங்களில் பட்டறிந்த கசப்பான அனுபவங்களை மனதில் கொண்டு, பேச்சுவார்த்தைகள் என்பது சர்வதேச பிரசன்னத்துடன் – சர்வதேச கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்பதை சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.
அத்துடன் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் குறிப்பிட்ட குறுகிய ஒரு காலப் பகுதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதையும் நிபந்தனையாக அவர் கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சு நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறிய பின்னரும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கத்தைப் பொருத்தமட்டில், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையென்பது, பொழுது போவதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமான ஒரு காரியமாகவே இருந்து வருகின்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் – தமிழ் மக்களையும் இந்த நாட்டின் கௌரவமிக்க பிரஜைகளாகக் கருதி உரிமைகளுடன் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதில் அரசாங்கத்திற்கு சிறிதும் அக்கறையோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியிவில்லை.
அத்தகைய பொறுப்புணர்ச்சி இருந்திருக்குமேயானால், யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த ஐந்து வருடங்களில் எத்தனையோ மாற்றங்களை அரசாங்கம் செய்திருக்கும் – செய்திருக்க வேண்டும். தமிழ் மக்களின் நல்வாழ்வையும் அவர்களின் அரசியல் நலன்களையும் சீர் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக நாளுக்கு நாள் நிலைமைகளைச் சீரழித்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையையே, அரசு யுத்த காலத்து வாழ்க்கையிலும் பார்க்க மோசமானதாக்க்யிருக்க மாட்டாது.
அது மட்டுமல்ல. ஏற்கனவே அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காமல், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி திறந்த மனதுடன் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தயார் என்று ஜனாதிபதி கூறியிருக்கமாட்டார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை விடுத்து, இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்துவதற்கே ஜனாதிபதிமுன் வர வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. எனவே அதனைப் பற்றி பேச்சுக்கள் நடத்த வேண்டிய தேவையே கிடையாது என்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஜனாதிபதி அதற்கு முன்வருவாரா?