ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தான் ஆடம்பரம் இல்லாமல், எளிய ரசனைகள் உடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் ஊடகங்களின் ஊகங்கள் மட்டுமே என்று, கடனைத் திரும்பக் கேட்டு சீன வங்கிகள் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய ஒட்டு மொத்த சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என்றும் தான் திவாலாகி விட்டவர் என்றும் அனில் அம்பானி அந்த நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

அனில் அம்பானி மீது என்ன வழக்கு?

சீன அரசுக்கு சொந்தமான மூன்று வங்கிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 2012ஆம் ஆண்டில் கடன் வழங்கியிருந்தன.

 

அந்தக் கடன் ஒப்பந்தத்தின்படி அந்த மூன்று வங்கிகளுக்கும் அம்பானி 717 மில்லியன் டாலர் பணத்தை 21 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று இந்த ஆண்டு மே மாதம் அந்த நீதிமன்றம் அம்பானிக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அனில் அம்பானி கையெழுத்திடாத ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சீனாவின் இன்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா இந்தக் கடனை அவர் திருப்பி செலுத்த வேண்டும் என்று கோருவதாக ரிலையன்ஸ் குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அப்போது தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி அந்த 21 நாட்களுக்குள் அனில் அம்பானி தங்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் மூன்று சீன வங்கிகளும் அம்பானி தன்னுடைய சொத்துகள் எவ்வளவு என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தன.

கடன் கொடுத்தவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்யாத வகையில், தனது கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரில் சொத்துகளை அவர் வாங்குவதாக அந்த வங்கிகள் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தன.

அதன்படி ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்ற ஜூன் மாதம் நீதிமன்றம் அம்பானிக்கு உத்தரவிட்டிருந்தது.

அவருக்கு தனிப்பட்ட வகையில் இருக்கும் சொத்துகள், கூட்டாக இருக்கும் சொத்துகள், அவருக்கு ஆதாயம் தரக்கூடிய பிற சொத்துகள் என அனைத்தையும் குறிப்பிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

‘அம்மாவிடம் 500 கோடி கடன்’

இது தொடர்பான வழக்கில் காணொலி காட்சி வாயிலாக வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி தன்னுடைய செலவுகள் அனைத்தையும் தனது மகன் மற்றும் மனைவியே பார்த்துக் கொள்வதாகவும், தன்னுடைய சட்டச் செலவுகளை பூர்த்தி செய்வதற்காக நகைகளை விற்று 9.9 கோடி ரூபாய் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தம்மிடம் தனிப்பட்ட சொத்துகள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரிடம் இருப்பதாக கூறப்படும் ஆடம்பர கார்கள் குறித்த நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “அவை அனைத்தும் ஊடகங்களின் கதைகள்.

என்னிடம் எப்பொழுதும் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருந்ததில்லை. தற்போது என்னிடம் ஒரே ஒரு கார் மட்டுமே உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அவர் பயன்படுத்தும் தனியார் ஹெலிகாப்டர் குறித்த கேள்விக்கு அதைத்தான் பயன்படுத்தினால் மட்டுமே அதற்கு தாம் கட்டணம் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

தமக்கு மேலதிக வழக்கு செலவுகளுக்கு பணம் தேவைப்படும் என்றால் நீதிமன்ற அனுமதியுடன் தன் வேறு சொத்துகளை விற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

டிசம்பர் 31, 2019இல் 40.2 லட்சம் ரூபாயாக இருந்த தன்னுடைய வங்கி இருப்பு ஜனவரி 1, 2020இல் 20.8 லட்சம் ரூபாயாக ஒரே இரவில் குறைந்தது என்றும் அம்பானி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தான் தனது தாய்க்கு 500 கோடி ரூபாயும், மகனுக்கு 310 கோடி ரூபாயும் கடனாக வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply