“நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்…தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…“
இந்த அழகிய பாடலுக்கு உயிர் கொடுத்த எஸ். பி. பாலசுப்ரமணியம் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர் பாடியதுபோல அவரின் தமிழ் பாடல்கள் மட்டுமல்ல பிற மொழி பாடல்களையும் பல்லாண்டுகாலம் நாம் கேட்டுக் கொண்டிருப்போம்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 35 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இன்னிசை காதல் பாடல்களுக்கு மிகவும் பெயர்போனவராக இருந்தவர்.
காதல் என்பது அவரது பாடல்களில் மட்டும் இருக்கவில்லை. அவரது சொந்த காதல் கதையுமே மிகவும் சுவாரஸ்யமானது.
இளம் வயதிலேயே காதலித்து வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், தனது காதலியை விஷாகப்பட்டினத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, 6 நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் எஸ்.பிபி.
“வாழ்வில் காதல் இருக்கவில்லை என்றால், பாடல்களில் என்னால் அதை வெளிப்படுத்தியிருக்க முடியாது” என தனியார் தொலைக்காட்சிக்காக நடிகை குஷ்பூ எடுத்த பேட்டியில் அவர் கூறியிருப்பார்.
அதே போல அவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். சச்சின் டெண்டுல்கர், டிராவிட், அனில் கும்ப்ளே கையெழுத்திட்டுக் கொடுத்த பேட்களை அவர் இன்றும் வீட்டில் வைத்திருக்கிறார்
இசைத்துறையின் ஜாம்பவான்
நூற்றுக்கணக்கான பாடகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இசை சக்ரவர்த்தியாக மக்கள் எஸ்.பி.பியை கொண்டாடுவது ஏன்?
குத்துப்பாடல்கள், காதல் பாடல்கள், மூச்சு விடாமல் பாடுவது என எந்த வகையான பாடல்களை பாடினாலும், அதன் உணர்ச்சிக்கு ஏற்ப பாடி மக்களை மகிழ்விப்பது அவரின் தனி சிறப்பு.
உதாரணமாக மின்சார கனவு படத்தில், “தங்கத் தாமரை மகளே…” பாடல் பாடியதும் எஸ்பிபிதான், சிந்து பைரவி படத்தில் “சிங்காரி சரக்கு, நல்ல சரக்கு” பாடல் பாடியதும் அவரேதான்
“எனக்கு மற்ற பாடகர்களுக்கு இல்லாத ஒரு சாதகமான விஷயம் ஒன்று இருக்கிறது. நான் நடிகரும்கூட. அதனால் என்னால் உணர்ச்சியை அதிகமாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்த முடியும்.
நான் நடிப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடித்திருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுவார்கள். ஆனால், எத்தனை விஷயங்களை ஒருவர் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியும்” என் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பார்.
மேலும், எஸ்பிபிக்கு இருந்த பன்மொழி புலமை அவரை தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு திரைத்துறைகளில் இருந்து நீக்க முடியாத ஒரு நபராக உருவாக்கியிருக்கிறது.
பல மொழிகள் பேசுவது பெரிய விஷயமல்ல. அதன் உச்சரிப்புதான் மிகவும் முக்கியம்.
இது குறித்து “தி இந்து” நாளிதழ் நேர்காணலில் பேசிய எஸ்பிபி, “நான் பாடலாசிரியர்களுடன் அமர்ந்து, அவர்கள் அந்த பாடல் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்டு உள்வாங்கிக் கொள்வேன்.
அப்போதுதான் அந்த உணர்ச்சிகளை என்னால் வெளிப்படுத்த முடியும். என்னால் அதனை சரியாக உச்சரிக்க முடியாது என்று தெரிய வந்தால், நான் அந்தப்பாட்டில் இருந்து விலகிக்கொள்வேன்” என்றார்.
நடிகரான அனுபவம்
பாடகர் பாலசுப்ரமணியத்திற்கு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த பல திரைப்படங்கள் உதவின.
அதில் முக்கியமான ஒன்று “காதலன்” திரைப்படம். இன்றும் நம் பலரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.
“பிரபு தேவாவிற்கு அது முதல்படம். இயக்குநர் ஷங்கருக்கும் “காதலன்” முதல் படம் போன்றது என்று சொல்லலாம். படப்பிடிப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்” என ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட அவர், அந்தப்படத்தில் பிரபு தேவாவுடன் நடனமாடிய நினைவுகளையும் பகிர்ந்தார்.
“இந்தியாவின் மைக்கெல் ஜாக்சனான பிரபு தேவாவுடன் என்னை நடனமாட வைத்தார்கள். பிரபுதேவா என்னிடம் “நான் ஓடி. ஓடி என்ன நடனம் ஆடுகிறேனோ அதை நீங்கள் ஒரே இடத்தில் இருந்து ஆடுங்கள். உங்களுக்குதான் கைதட்டல் வரும்” என்று கூறினார். இறுதியில் அப்படிதான் நடந்தது.”
அதோடு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பி.
பாக்கியராஜ், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் தெலுங்கில் மொழிபெயர்ப்பாகி வெளியானபோது, அவர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் இவர்தான்.
தசாவதாரத்தின் தெலுங்கு படத்தில் கமல்ஹாசனின் அனைத்து வேஷங்களுக்கும் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறார். பெண்ணாக பாட்டி வேஷத்தில் வரும் கமல்ஹாசனுக்கும் இவரின் குரலே.
சில்மிஷத்திற்கு சொந்தக்காரர்
வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எஸ்.பிபியின் குறிக்கோளாக இருந்தது.
“துறவி போல வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாடகராகும் முன்பு அதிகமாக புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன்.
பாடகரான பிறகு நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையால் அந்த பழக்கத்தை விட்டேன். நடுவில் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் என் எடை கூடியது.
கடினமான நேரங்களையும் தாண்டி வாழ்க்கை அழகானது” என இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த எஸ்பிபி கூறியிருந்தார்.
அவர் எவ்வளவு மகிழ்ச்சியான, வேடிக்கையான மனிதர் என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது பாடகி சித்ரா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டது.
“இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எனக்கு தெலுங்கு மொழி அவ்வளவாக தெரியாது.
என்னுடன் பாட இருந்த எஸ்.பி.பியிடம் உதவி கேட்டேன். அவர் எனக்கு சில வரிகளை எழுதி கொடுக்க, நான் அதனை ஸ்டூடியோவில் சென்று பாட ஆரம்பித்தவுடன் அங்கிருந்த அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என்னவென்று தெரியவில்லை. பிறகுதான் தெரியவந்தது அவர் என்னை கிண்டல் செய்ய தப்பு தப்பாக வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று” என சித்ரா தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசியிருந்த எஸ்.பி.பி, “சித்ரா பாடத் தொடங்கியதும் அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.
நான் மட்டும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு எதற்கு சிரிக்கிறார்கள் என மீண்டும் மீண்டும் கேட்டேன்.
அந்தப்பாட்டில் அந்தப் படத்தின் இயக்குநரை விளையாட்டுக்காக திட்டுவது போல வரிகள் எழுதியிருந்தேன்.
அந்த இயக்குநர் சித்ராவை பார்த்து, என்ன கோபம் இருந்தாலும், பாட்டு எழுதி திட்டுவியா மா நீ என்று கேட்டார். சித்ரா பயந்துவிட்டார். அழ ஆரம்பித்துவிட்டார்.
எஸ்.பி.பி தான் பாட்டு எழுதி கொடுத்தார். அதைத்தான் நான் பாடினேன் என்று சொன்னார். இயக்குநர் என்னைப்பார்த்து ‘உன் வேலையா இது’ என்று கேட்டார். சும்மா விளையாட்டுக்காக செய்தேன் சார் என்று சொன்னேன்” என்றார் அவர்.
ரெக்கார்டிங் எல்லாம் முடிந்தபிறகு, சித்ரா அவரிடம் வந்து “ஏன் இப்படி செய்தீர்கள்? நீங்கள் இப்படி செய்யலாமா?” என்று கேட்டு அழ, விளையாட்டுக்காகத்தான் செய்தேன் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினார் எஸ்.பிபி.
இன்று எஸ்.பி.பிக்காக ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே அழுது கொண்டிருக்கிறது. ஆனால், சமாதானப்படுத்தத்தான் அவர் இல்லை.