நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இந்திய பிரஜை உள்ளிட்ட அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கலேன்பிந்துணுவௌ
கலேன்பிந்துணுவௌ – கெக்கிராவை வீதியில் 16 கிலோ மீற்றர் தொலைவில் மரதன்கல்ல பகுதியில் கலேன்பிந்துணுவௌ நோக்கி பயணித்த வேனொன்று வீதியின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கலேன்பிந்துணுவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரதன்கல்ல – மெகொடவௌ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம
ஹோமகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்மாந்தபுரய பகுதியில் தனியார் நிறுவனமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரும்பு உபகரணங்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்று மற்றுமொரு வாகனம் செல்வதற்காக வழிவிட முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றுள்ளது. இதன்போது குறித்த லொறியின் சில்லுக்குள் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
40 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு
புதக்குடியிருப்பு – வீதியில் 21 கிலோ மீற்றர் தொலைவில் 22 ஆம் கட்டை பகுதிக்கருகில், முல்லைத்தீவு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் அதில் சென்ற மற்றொரு நபரும் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விஸ்வமடு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களுவாஞ்சிக்குடி
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை வீதி, தேத்தாத்தீவு பள்ளிவாசலக்கு அருகில் மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று வீதியில் நின்று கொண்டிருந்த சிறுவனொருவன் மீதும் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கர வண்டியுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நிந்தவூர் – கல்முனை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துக்குக் காரணமான மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை
பொலன்னறுவை – சுங்காவில வீதி, குருப்பு சந்தி, மயான வீதியில் சுங்காரவில நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டில் ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் வீதியில் சென்ற வேனின் சில்லில் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிங்ஹபர – விஜயஹாபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை
திருகோணமலை நகரின் பஸ் நிலையம் நோக்கி சென்ற காரொன்று எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூர் வீதி – திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.