இலங்கையில் பதிவு செய்யப்படாத புதிய கையடக்கத் தொலைபேசிகளில், சிம் அட்டைகள் இணைக்கப்படுவதாக இருந்தால், அந்த சிம் அட்டைகள் இன்று முதல் செல்லுப்படியற்றவையாகும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் மாத்திரமன்றி, அனைத்து விதமான தொலைத்தொடர்பு சாதனங்களுக்கும் இந்த நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம் அட்டைகளினால் செயற்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்தல் அல்லது வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து அனுமதியை பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர், தமது ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ள தொடர் இலக்கத்தை பரீட்சித்துப்பார்க்க வேண்டும் என ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்காக புதிய நடைமுறையொன்றை இலங்கை தொலைத்தொடர்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியிலிருந்து IMEI (SPACE) (15 DIGIT IMEI NUMBER) என டைப் செய்து 1909 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவலை எஸ்.எம்.எஸ் செய்வதன் ஊடாக, குறித்த தொலைபேசி அல்லது தொலைத்தொடர் சாதனம் தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

இவ்வாறு தம்மிடம் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணத்தில் சிம் அட்டை இணைக்கப்படுமாக இருந்தால், அந்த சிம் அட்டையின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

தற்போது கையடக்கத் தொலைபேசி வலையமைப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு இது ஏற்புடையது அல்லவென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்போது பாவனையிலுள்ள தொலைத்தொடர்பு சாதனங்களை விரைவில் பதிவு செய்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை பதிவு செய்வதற்கான நடைமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

பாவனையாளர்கள் சந்தையிலுள்ள போலி உபகரணங்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடனேயே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Share.
Leave A Reply