இலங்கையின் கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவசர நிலையை அறிவித்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிக்கை தெரிவிக்கின்றது.

சமூகத்திற்குள் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது கட்டாயம் என சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திவுலபிட்டி, வெயங்கொட மற்றும் மினுவங்கொட ஆகிய பகுதிகளில் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படாத போதிலும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைய செயற்படுமாறும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

வீடுகளிலிருந்து வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக கவசத்தை அணியுமாறும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அடிக்கடி கைகளை கழுவுதல் அத்தியாவசியம் என்பதுடன், நெருங்கி பழகுதலை தவிர்த்துகொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுக்கின்றது.

ஒரே நபருக்கு மூன்று தடவைகள் கொரோனா

இதேவேளை, ஒரே நபருக்கு மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவமொன்றும் இலங்கையில் பதிவாகியுள்ளது.

புத்தளம் மாவட்டம் ஆணைமடு பகுதியிலுள்ள 23 வயதான இளைஞர் ஒருவருக்கே மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்டிஸ்ல இருந்து ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நாட்டிற்கு திரும்பிய குறித்த இளைஞன், பொலன்னறுவை – வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக, குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிபடுத்தப்பட்டதாகவும் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த நபர் சிகிச்சைகளை அடுத்து வெலிகந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறியதன் பின்னர், தனது வீட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தமையினால், கொவிட் வைரஸ் அவருடாக பரவுவதற்கு சாத்தியம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டமையினால், அவர் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு கொரோனா தொற்று தொடர்ந்தும் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதையடுத்து, குறித்த நபர் இரணவில கொவிட் மத்திய நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், அங்கும் அவர் இரண்டாவது முறையாகவும் குணமடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குணமடைந்த குறித்த நபர், மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உள்ளமைக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நபருக்கு மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்று மீண்டும்

கம்பஹா – மினுவங்கொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்று பல மாத காலமாக பரவாத நிலையில், நேற்று முன்தினம் புதிய தொற்றாளர் ஒருவர் சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்டார்.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண்ணொருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதையடுத்து, சுமார் 1400ற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 69 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பிலான விசாரணைகளை அரச புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் தேடி வருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.

முக்கிய முடிவுகள்

இதற்கிடையே, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டதை அடுத்து, சுகாதார அமைச்சு அவசர கூட்டம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மினுவொங்கட மருத்துவமனை, இரானவிலா கோவிட்-19 மருத்துவ நிலையத்தை கம்பஹா மாவட்டத்தில் வைஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்ட மருத்துவமனையை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ய பயன்படுத்தவும், இன்றைக்குள் மினுவொங்கட தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 2000 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் ஊழியர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடங்குவர்.

Share.
Leave A Reply