தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதனியும், முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே,  2015 இன் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு பேரவையில் விடயங்களை முன்வைத்த போது, அதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது எதிர்ப்பை வெளியிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முஸ்லிம்களிடையே அமைதியின்மை ஏற்படலாம் என தெரிவித்து அதனை அவர் எதிர்த்ததாகவும்,  அதன் பின்னர் பிரிகேடியர் சுரேஷ் சலேவை இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து மாற்ற பிரதமர் ரணிலும் மற்றொரு அமைச்சரும்  அழுத்தம் கொடுத்ததாகவும்  அவர் சாட்சியமளித்தார்.

எவ்வாறாயினும்  சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக சுரேஷ் சலேவை கைது செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், தானும் அப்போதைய இராணுவ தளபதியும் இணைந்து கலந்துரையாடி, அவரை மலேசியா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று 2 ஆவது நாளாக சுமார் 6 மணி நேர சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஒரு முறை நிகாப்பை தடை செய்ய பேச்சுக்கள் இடம்பெற்றபோது,  அங்கு பேசப்பட்ட விடயங்களை பிரதமர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிப்படுத்தியதாகவும், ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த அக்கரையும் கொண்டிருக்கவில்லை எனவும்  அதனால் அவரை தேசிய பாதுகாப்பு பேரவைக்கு அழைப்பதை நிறுத்தியதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி எனும் ரீதியில் தான் வழங்கும் எந்த ஆலோசனைகளையும் பின்பற்றக் கூடாது என அப்போதைய பிரதமர் ரணில் அமைச்சர்களுக்கு அறிவித்திருந்தார் எனவும் ஆணைக் குழுவில் சுட்டிக்கட்டினார்.

Share.
Leave A Reply