மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை பதிவுத் திருமணம் செய்வதற்காகச் சென்ற மாப்பிளை, திருமணப் பதிவாளர் உட்பட பதினான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பதிவுத் திருமணத்துக்காக இவர்கள் கடந்த 2 ஆம் திகதி மினுவாங்கொடைக்குச் சென்றமை தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பியகம நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

மினுவாங்கொடைக்கு கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்யத் தனது உறவினர்களுடன் இளைஞன் ஒருவர் சென்று திரும்பிய சில நாட்களில் குறித்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞர் உட்பட அவருடன் சென்ற 14 பேருக்கும் கடந்த 10 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இவர்களுக்குப் பதிவு திருமணத்தைச் செய்து வைத்த சபுகஸ்கந்த – கோனவல பகுதியிலுள்ள திருமணப் பதிவாளர் உட்பட திருமண சாட்சிக்குக் கையொப்பமிட்ட இருவர் கடந்த 10 ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி இளைஞரும், யுவதியும் கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், 9 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டதையடுத்து, அதற்குச் சென்றவர்களை தனிமைப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பியகம நிர்வாக பொதுச் சுகாதார ஆய்வாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

Share.
Leave A Reply