மக்களின் இறைமைக்கு எதிரான அரசமைப்பையோ, அரசமைப்பின் மீதான திருத்தங்களையோ அரசாங்கம் கொண்டுவரும் போது, எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்ப்பது வழமையாகும். 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் முன்மொழிந்த போதும் அதுதான் நடந்தது.
ஆனால், அந்த எதிர்ப்பு நடவடிக்கை, மும்முரமாக முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு சம்பிரதாயத்துக்காகவே நிகழ்ந்தது.
எதிர்க்கட்சிகள் பலவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு, தமது பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டன.
ஓர் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படுவதற்குரிய மனத்திடத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தவில்லை.
அப்படியான நிலையில், ஒற்றை மனிதரிடம் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக ஒப்படைக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம், எந்தவித பிரச்சினைகளும் இன்றி, நிறைவேறிவிடும் என்ற நிலை தோன்றியிருந்தது.
ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பலையொன்று மெல்லமெல்ல எழுந்து, இன்றைக்கு மூர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கின்றது.
அது, மஹிந்த ராஜபக்ஷவைத் தொடரும் பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்தும் ‘வியத்மக’காரர்களுக்கும் இடையிலான மோதலின் விளைவாகும்.
20ஆவது திருத்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை உரிமை கோருவது சார்ந்து, ஆளுங்கட்சிக்குள் குழப்பம் நீடித்தது.
20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் தந்தை யார், என்கிற கேள்வி எழுந்தது. ஒருகட்டத்தில், அதற்கான பொறுப்பை, கோட்டா ஏற்றுக்கொண்டார்.
கிட்டத்தட்ட, ஜே.ஆர் காலத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் தாண்டிய அதிகாரத்தை நோக்கிய வரைபை, கோட்டா முன்மொழிந்து இருக்கின்றார் என்கிற உணர்நிலை, மஹிந்தவையும் பாரம்பரிய அரசியல்வாதிகளையும் அதிர்ச்சியுற வைத்தது.
அதன் விளைவுகள்தான், இன்றைக்குப் பௌத்த பீடங்கள் உள்ளிட்ட மத நிறுவனக் கட்டமைப்புகளின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன.
ஜனாதிபதி கோட்டாவின் ‘வியத்கம’ தரப்பும் அதன் இணக்க சக்திகளுமே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை வரைந்தன.
கோட்டா என்கிற ஒருவரிடத்தில், அதிகாரங்களைக் குவித்தால் போதும் என்கிற நிலைப்பாட்டோடுதான், 20ஆவது திருத்தச் சட்டமூலம் வரையப்பட்டது.
ஒப்புக்காகவேனும் மஹிந்தவிடமோ, பொதுஜன பெரமுன என்கிற கட்சியிடமோ, கூட்டணிக் கட்சிகளிடமோ ஆலோசனை பெறப்பட்டு இருக்கவில்லை.
அதுதான், 20ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியிடப்பட்ட போது, அதை யார் உரிமை கோருவது என்கிற சிக்கல் ஆளுங்கட்சிக்குள் எழுந்தது.
ஜனாதிபதி நினைத்தால், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களைப் பதவி நீக்கலாம்; பதவியில் அமர்த்தலாம்.
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம், ஒரு வருடத்தைத் தாண்டியதும், ஜனாதிபதி நினைத்தால் கலைக்கலாம் உள்ளிட்ட பல விடயங்கள், பாரம்பரிய அரசியல்வாதிகளைச் சீண்டின.
அதாவது, பாதுகாப்புச் செயலாளராக, ஜனாதிபதி கோட்டா இருந்த காலத்தில், பாதுகாப்புத் தரப்பினரைக் கடுமையான உத்தரவுகளுக்கு அமையச் செயற்படுத்தியது போன்றதொரு தோரணையை, இப்போது அரசியல்வாதிகளிடம் பிரயோகிக்க முனைகிறாரோ? அதற்காக அவர், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கையாள எத்தனிக்கிறாரோ என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் உதயமானது.
இதை மஹிந்தவோ, அவரது ஆதரவுத் தரப்போ, ஆரம்பத்தில் இருந்தே இரசிக்கவில்லை. ஆனால், இதை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பத்தில் இருந்தன.
அந்த நேரத்தில்தான், புதிய அரசமைப்பை வரைவதற்கான நிபுணர்குழு, நீதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குழுவிலும், ஜனாதிபதி கோட்டாவின் ஆதரவுத் தரப்பினரே உள்வாங்கப்பட்டனர். கடந்த காலத்தில், அரசமைப்புப் பணிகளில் ஈடுபட்டவரும் அனுபவமுள்ள அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ் கூட, புதிய அரசமைப்புக்கான குழுவில் உள்வாங்கப்படவில்லை.
அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பில், ஏற்கெனவே ஆளுங்கட்சிக்குள் பெரும் அதிருப்தி உண்டு.
ஜனாதிபதி கோட்டா, தங்களின் ஆலோசனைகளை மீறி, அலி சப்ரியை நீதி அமைச்சராக்கி இருக்கிறார் என்பதாகவே, அந்த அதிருப்தி இருந்தது.
அப்படியான நிலையில், புதிய அரசமைப்புக்கான குழு, அலி சப்ரியின் சிரேஷ்ட சட்டத்தரணியும் கோட்டாபயவுக்காக வழக்குகளில் ஆஜராகி வந்தவருமான, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டது.
இது, 20ஆவது திருத்தச் சட்டமூலம் வரையப்பட்டது மாதிரியான நெருக்கடியான சூழலொன்றை, புதிய அரசமைப்புக்கூடாகவும் வழங்கிவிடும் என்று மஹிந்த நினைத்தார். அப்போதுதான், அவர் ஒரு பழுத்த அரசியல்வாதியாகச் செயற்படத் தொடங்கினார்.
ராஜபக்ஷர்களிடம் முரண்பாடுகள் காணப்பட்டாலும், அவற்றை அவர்கள், பொது வெளியில் காட்டிக் கொள்வதில்லை.
ஒற்றுமையும் அதற்கான அர்ப்பணிப்புமே தங்களது அடிப்படை என்று காட்டிக் கொள்வார்கள்; ராஜபக்ஷர்கள் ஆளப் பிறந்தவர்கள் என்கிற தோரணயை வெளிப்படுத்துவார்கள். அது, ஒரு கட்டத்தில் வாக்குகளாகவும் மாறிவந்திருக்கின்றது.
அப்படியான நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து, ராஜபக்ஷ சகோதரர்கள், தங்களுக்குள் வெளிப்படையாக முரண்பட்டுக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, அதை ஓர் அரசியலாக முன்னெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஜனாதிபதி கோட்டாவிடம், எல்லா அதிகாரமும் செல்வதை, மஹிந்த கொஞ்சமும் விரும்பவில்லை. அவர், 19ஆவது திருத்தத்தில், நாடாளுமன்றத்தோடு பகிரப்பட்ட அதிகாரங்களைத் தக்க வைப்பது சார்ந்துதான், ஆர்வத்தோடு இருக்கிறார்.
ஆனால், நல்லாட்சிக் காலத்துக் குழப்பங்களைக் களைவது தொடர்பில், தென் இலங்கைக்கு வழங்கிய வாக்குறுதிகளை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாகத்தான் செய்யலாம் என்கிற தோற்றப்பாடு உருவாக்கப்பட்ட நிலையில்தான், அவரது கையை மீறிச் சென்றது.
இதை, அவர் ஓர் அரசியல்வாதியாகக் கையாளத் தொடங்கினார். ஆளுங்கட்சிக்குள் இருக்கும் விமல் வீரவங்சவைக் கொண்டு, 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான குரலை எழுப்ப வைத்தார். அது, மெல்ல மெல்ல அடுத்தவர்களையும் குரல் எழுப்பும் தைரியத்தைக் கொடுக்க வைத்தது.
இன்றைக்கு அது, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்திருப்பதாகக் கொள்ள முடியும். அதாவது, மத நிறுவனங்கள் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கும் கட்டம் என்பது, மஹிந்தவின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில் நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது.
பௌத்த பீடங்களில் வரிசையில் முதலாம், இரண்டாம் நிலையில் இருப்பவை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள். அவை, 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், தமக்கிடையில் பேசிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே, மூன்றாம், நான்காம் நிலையில் இருக்கும் அமரபுர, ராமன்யா பீடங்கள், எதிர்ப்பை வெளியிட்டுவிட்டன.
தென் இலங்கையைப் பொறுத்தவரை, அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் வார்த்தைகள்தான் அதி முக்கியமானவை. அவை எடுக்கும் நிலைப்பாடுகளை நோக்கிய திரட்சி என்பது, தவிர்க்க முடியாதது.
தற்போதைய, கோட்டா – மஹிந்த அதிகாரப் பங்கீட்டுப் போட்டியில், அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், மஹிந்த பக்கம் இருக்கும் நிலையே காணப்படுகின்றன.
அப்படியான நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விடயம், இன்னும் நலிந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஏற்கெனவே, 20ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வியாக்கியானத்தில், உயர்நீதிமன்றம் சில விடயங்களில் தலையீடு செய்திருக்கின்றது.
அதாவது, ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்கிற கட்டத்தை, குறைந்தது இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னராகவே கலைக்க முடியும் என்கிற மாற்றங்களைச் செய்யுமாறு வியாக்கியானப்படுத்தி இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
அதுபோல, தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் கடமையை, ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றது.
இப்படியான நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் அதன் அடுத்த கட்டங்களை நோக்கி, எப்படி நகரப் போகின்றது என்கிற கேள்வி, தவிர்க்க முடியாததாகின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கமொன்று, ஆட்சியில் இருந்த போதிலும், ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலான அதிகாரப் பங்கீட்டுக் குழப்பம், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் வருகையை, சிலவேளை தடுத்து விடலாம்.
அவ்வாறு நிகழ்ந்தால், 19ஆவது திருத்தத்தின் ஊடாகப் பாதுகாக்கப்பட்ட அடிப்படை ஜனநாயகமும் மக்களின் இறைமையும் குறிப்பிட்டளவு தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
இல்லையென்றால், ஒற்றை மனிதரிடம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வழங்கும் மன்னராட்சிக் காட்சிகளுக்காக, நாம், எம்மைத் தயார்படுத்த வேண்டியிருக்கும்.
-புருஜோத்தமன் தங்கமயில்-