அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.
ராணுவம் மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே, இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.
விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்
இதனிடையே, இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் – அலிக்கம்பை பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
முத்துலிங்கம் அந்தோனி மற்றும் சாமித்தம்பி பிரதீப் எனும் பெயருடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முத்துலிங்கம் அந்தோனி என்பவர், புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என, அக்கரைப்பற்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் ராதா படைப்பிரிவில் 10 ஆண்டுகளாக செயற்பட்டு வந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் போலீசார் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 28ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.