கொரோனா வைரஸ் மனித தோலில் ஒன்பது மணி நேரம் சுறுசுறுப்பாக உயிர் வாழும் என்பதுடன், காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமியை விட நீண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது..!
கொரோனா தொற்று மனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் காரணமாக கொரோனாவை எதிர்த்துப் போராட அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டியதன் அவசியத்தை ஆராய்ச்சி யாளர்கள் சுட்டுக் காட்டியுள்ளனர்.
காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமி மனித தோலில் சுமார் 1.8 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் மனித தோலில் ஒன்பது மணிநேரம் உயிர்ப்புடன் இருக்கும். இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
கொரோனாவால் இறந்து ஒரு நாள் கழித்து பிரேதப் பரிசோதனை மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தோலை ஆராய்ச்சிக் குழு பரிசோதித்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சல் வைரஸ் இரண்டும் சனிடிசர்களில், எத்தனோல் பயன்படுத்துவதன் மூலம் 15 விநாடிகளுக்குள் அழிக்கப்படுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு சிறந்த சுகாதாரம் மற்றும் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ‘மருத்துவ தொற்று நோய்கள்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஜப்பானிலுள்ள கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இது கவனிக்கத்தக்க ஒரு கண்டுபிடிப்பு என்றாலும், பீதியடையத் தேவையில்லை. சனிடிசரை கைகளுக்கு அடிக்கடி பயன்படுத்துவதால் வைரஸ் செயலற்றதாகி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
“SARS-CoV-2 நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க சரியான கைச் சுகாதாரம் முக்கியம்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.