கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பணு ஆற்றல் இளைஞர்களிடமும் வயோதிகர்களிடமும் தூண்ட சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராசெனிகா தெரிவித்துள்ளது.

வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பல்வேறு நாடுகளின் முயற்சியில் இந்த தடுப்பூசி மருந்து திருப்பத்தை ஏற்படுத்தலாம் என அந்த நிறுவனம் கூறுகிறது.

உலக அளவில் இதுவரை 11.50 லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பல வல்லரசுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புப் பணியில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில மட்டுமே பயன் தரும் வகையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து வைரஸ் தடுப்பூசி தயாரிப்புக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அஸ்ட்ராசெனிகா நிறுவனம், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்களில் இளைஞர்களிடம் எதிர்ப்பணுக்கள் அதிகரிப்பதைப் போலவே, வயோதிகர்களிடமும் எதிர்ப்பணுக்களை தூண்ட, சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக அஸ்ட்ராசெனிகா நிறுவன செய்தி்ததொடர்பாளர் கூறினார்.

இதுவரை இளைஞர்களின் எதிர்ப்பணுக்கள் மட்டுமே அதிகரிக்கப்படுவதாக கருதப்பட்டு வந்த வேளையில், வயோதிகர்களின் எதிர்ப்பணுக்களும் மேம்படுவது விரைவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் சாதகமானதாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் சுகாதாரத்துறைச் செயலாளர் மேட் ஹான்காக் கூறும்போது, “இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து தயாராக இல்லாவிட்டாலும், அது அடுத்த ஆண்டு மத்தியில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அனுமானத்தில், அதற்கான விநியோக கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

Share.
Leave A Reply