தர்ஷன் மீது சனம் ஷெட்டி தொடுத்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்துவிட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு அக்டோபர் 6-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், சனம் ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், அடையார் மகளிர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.