கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய மேலும் சிலருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவருகின்ற நிலையில் இன்று மேலும் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 184 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் ஆவர்.
நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டே நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தால் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு 10.30 மணிவரை 356 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 285 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 10 619 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடையவர்களாவர்.
இன்று திங்கட்கிழமை குருணாகல் மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் இன்று மாலை முதல் அங்குலான வடக்கு மற்றும் தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் அறிவிக்கப்பட்டன.
இன்றுமாலை வரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 5186 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு , 8880 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கையும் 36 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குலானை வடக்கு மற்றும் அங்குலானை தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று மாலை முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டன
குருணாகல் மாநகரசபைக்கு உட்பட்ட இலிப்புகெதர கிராம சேவகர் பிரிவு மற்றும் கடவீதி கிராம சேவகர் பிரிவு என்பன இன்று திங்கட்கிழமை மாலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குளியாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெதர , ஹம்மலவ மற்றும் மேல் கழுகொமுவ கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
நாடளாவிய ரீதியில் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை வரை 27 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2409 பேர் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது
கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை 109 ஆக உயர்வடைந்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை, பழைய போகம்பரை சிறைச்சாலை மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 90 பெண் கைதிகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.