முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் மனித எச்சங்கள், கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் விடுதலைப் புலிகளின் இலக்கம் பொறிக்கப்பட்ட தகடுகள், உடைகள் போன்றனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் வயல் நிலத்தை உழுது பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் வரம்பு கட்டும்போது மனித எச்சங்கள் இருப்பதை அவதானித்ததை அடுத்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு விஜயம் செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் அந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதன்படி, நீதவான் விசாரணைகள் முடிவடைந்து குறித்த இடத்திற்கு சென்றிருந்த சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, குறித்த இடத்தில் மனித உடல் பாகங்கள், எலும்புகள் மற்றும் உடைகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘த.வி.பு-ஐ 1606’ என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட இரண்டு தகடுகளும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் குறித்த பொருட்கள் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.