தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளை பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர் வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்புரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்பரவு செய்ய தயாரில்லை என்று குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா இவ்வாறானவர்களை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (21.11.2020) கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் விவசாயம் – பெருந்தோட்டம் – கடற்றொழில் துறைகள் உட்பட எமது நாட்டின் வளங்களை கொண்ட உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியே தற்போதைய நாட்டின் தேவையாக உள்ளது.

காலத்திற்கேற்ப தேவைகைள இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்கின்ற வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது.

ஆனால் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் கிளப்புகின்ற சுயலாப அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல.

அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது.

அதேநேரம் போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு ,கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல் போன்ற மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், கிடைக்கின்ற வளங்களை எல்லாம் பயன்படுத்தி எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கின்;றோம்.

ஆனால் மயானங்களை துப்புரவு செய்கின்ற இவர்கள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’என்று தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் உலகெங்கும் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்றொழிலாளர் சமூகத்திற்கு தன்னுடை வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்.

அவர்கள் எதிர்க்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply