கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டப 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக நிலவிவரும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமானது தற்போது “நிவர்” புயலாக விருத்தியடைந்து காங்கேசன்துறையின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இருந்து 325 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசை ஊடாக தமிழ்நாட்டை நோக்கி அடுத்த 36 மணி நேரத்துக்குள் நகரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும்  80-100 கிலோ மீற்றர்  அளவில் காற்றுவீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதனால் யாழ் மாவட்டத்தில் கடலுக்கு செல்பவர்கள் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்  எனவும் அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள்  விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது எனினும் இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள் அத்தோடு 17  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நேற்று வடமராட்சி வல்வெட்டித்துறை வடமேற்கு பகுதியை சேர்ந்த  இளைஞர் ஒருவர் கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்தார் எனினும்  கடல் கொந்தளிப்பின் காரணமாக இந்திய கரையினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply