கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர்.
பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை.
தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.
சர்வதேச கால்பந்தில் மாரடோனா அடித்த கடைசி கோல்
1986ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்கு இரண்டாவது உலக கோப்பை கிடைப்பதில் மாரடோனாவின் அபாரமான ஆட்டம் காரணமாக இருந்தது. அப்போது அவரது தாய்நாடான அர்ஜென்டீனா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது.
அவரளவுக்கு வேறெந்த வீரராலும் துல்லியமாகவும் லாவகமாகவும் கோல் அடிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை. கால்பாந்தாட்ட உலகில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமது தாயக அணியின் சிறப்பு பயிற்சியாளராக மாரடோனா இருந்தார். இந்த நிலையில், கால்பந்தாட்டத்துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது உயிரிழப்பு அமைந்து விட்டதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
1960ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி பிறந்த மாரடோனா, இருபதாம் நூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரராக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர். அவரது மனைவி கிளாடியா வில்லஃபேன் 2003ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.