மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திருமணம் முடித்து பிரிந்து இரண்டு குழந்தையுடன் வாழ்ந்து வந்த மனைவிக்கு தாபரிப்பு பணம் செலுத்த முடியாமல் சிறைக்குச் சென்று திரும்பிய கணவன் மனைவியின் வீட்டிற்குள் நுழைந்து அவர் மீது இரு கத்திகளால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

 

இதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தலை மறைவாகியிருந்த கணவனை நேற்று செவ்வாய்க்கிழமை (08)கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு புளியடித்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த மேகலா என்ற பெண் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நீதிமன்றத்தை நாடிய நிலையில் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதுடன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் கணவன் தாபரிப்பு பணம் செலுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் மனைவிக்கு மாதாந்த தாபரிப்பு பணம் செலுத்தாமல் இருந்து வந்த கணவனான செந்தூரன் என்பவருக்கு நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு அவரை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த 40 வயதுடைய கணவன், சம்பவ தினமான திங்கட்கிழமை (07) அதிகாலை மனைவியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சமையல் அறைப் பகுதிக்கு இழுத்துச் சென்று அவரின் முதுகில் இரு கத்திகளால் 13தடவை கத்திகுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சி.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸார் தப்பி ஓடி தலைமறைவாகிய செந்தூரனைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் அவரை மட்டக்களப்பு நகரில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply