கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை, வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, எனினும் இன்னும் உறவினர்களால் பொறுப்பேற்றுக்கொள்ளப்படாத ஜனாசாக்கலை தகனம் செய்வதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத பெரும்பாலான முஸ்லிம்களின் ஜனாசாக்கள், பிணவறையில் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.இன்று (14) வரை, உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத 9 சடலங்கள் பிணவறையில் இருப்பதாகவும் இதைத் கட்டாயமாக தகனம் செய்யும் செயற்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, இதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய, இச்செயற்பாட்டை, கொழும்பு மாநகர சபை இடைநிறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாயக்களை அடக்கம் செய்வதற்காக, குறைந்த நீர்நிலைகளைக் கொண்ட, வரண்ட நிலத்தைத் தேடுமாறு, சுகாதார அதிகாரிகளுக்கு, பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகள், இந்த நிலம் குறித்தான ஆராய்ச்சியை, பிரதமருக்குத் தெரிவிக்கும் வரை, தற்போது முன்னெடுக்கப்படவிருந்த தகன செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை தெரிவித்துள்ளது.

ஜனாசாக்களை தகனம் செய்வது, தங்களது நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களையும் தகனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு, முஸ்லிம் சமூகம் கவலை தெரிவித்து வருகின்றது.

இதையடுத்து, தொற்றால் உயிரிழந்த 20 சடலங்கள் பொறுப்பேற்கப்படாமல் உள்ள நிலையில், அவற்றில் 11 ஜனாசாக்கள் முஸ்லிம்களுடையது என்றும் அவற்றில் 9 ஜனாசாக்கள், தகனம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, தற்போது இந்தச் செயற்றிட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்யாமல், அவற்றுக்கு கொங்கிரீட் கல்லறைகளைக் கட்டுவது குறித்து, சுகாதார அமைச்சு ஆலோசனையை முன்மொழிந்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேராத், இந்தத் பிரச்சினைக்கான தீர்வு, அடுத்தக் கூட்டத்தில் நிபுணர்கள் குழுவால் முன்மொழியப்படவுள்ளது என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய, கொங்கிரீட் கல்லறைகளை உருவாக்க, பொறுத்தமான நிலத்தைத் தேடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply