காலி, தெத்துகொட பகுதியில், கொரோனா நிலைமை காரணமாக உயிரிழந்தவரின் ஜனாஸா தொடர்பில், கடந்த ஏபரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2170/8 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்குமாறும், அது தொடர்பில் காலி மேலதிக நீதிவானுக்கு அறிவிக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, அந்த ஜனாஸா தகனம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக கொரோனா மரணம் என சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கப்பட்ட நபர் ஒருவரின் ஜனாஸா தொடர்பில், தகனம் செய்யுமாறு, காலி மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்ட பின்னர், அதற்கு எதிராக உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு மீது விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
காலி, தெத்தெகொட பகுதியை சேர்ந்த 84 வயதான முஸ்லிம் முதியவர் ஒருவர் உயிரிந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 3 பிள்ளைகளின் தந்தையான அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த நபரின் ஜனாஸாவை (சடலத்தை) தனிமைபப்டுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு விதிமுறைகள் பிரகாரம், தகனம் செய்யுமாறு காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி சந்ரசேன லொக்குகே உத்தர்விட்டுள்ளார்.
இந் நிலையில் குறித்த ஜனாஸாவை தகனம் செய்வதானால், பிரேதத்தை ஏற்கப் போவதில்லை என உயிரிழந்த நபரின் மகன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டுவரும் நிலையில், அது தொடர்பிலான இறுதி முடிவு எட்டப்படும் வரை உயிரிழந்த குறித்த நபரின் ஜனாஸாவை தகனம் செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு, குறித்த உயிரிழந்த 84 வயது நபரின் உறவினர்கள் காலி நீதிவான் நீதிமன்றில் விஷேட மனுவூடாக கோரினர்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அடக்கம் செய்வது தொடர்பிலான சந்திப்பை தொடர்ந்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, நீதி அமைச்சருக்கு அனுப்பிய, ஜனாஸாக்களை வைக்க குளிரூட்டிகளை கோரியுள்ள கடிதமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே இந்த விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரண, கொவிட் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதியான இறுதி நிலைப்பாடு கிடைக்கும் வரை, குறித்த முதியவரின் ஜனாஸாவை அதி குளிரூட்டியில் வைக்குமாறு உத்தர்விட்டார்.
இந் நிலையிலேயே நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று, சுகாதார சேவைகள் பணிப்பாலர் நாயகம் தனது ஆலோசனைகளை வழங்கியுள்ள நிலையில், குறித்த சடலம் தொடர்பில் 2170/8 ஆம் இலக்க வர்த்தமானி பிரகாரம் செயற்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே, காலி கராபிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் நபரின் ஜனாஸாவை அங்கிருந்து அகற்றுமாறும், அதுவரை எந்த பிரேத பரிசோதனைகலையும் முன்னெடுக்கப் போவதில்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரிகள் அங்கு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று மாலை அது நிறைவுக்கு வந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.