சுற்றுலாப்பயணிகளுக்காக விமானநிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் இன்றைய தினம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது.

உக்ரேனின் ஸ்கை அப் விமான சேவையின் பி.கியூ 555 இலக்க, 737 – 900 போயிங் விமானமே இன்று திங்கட்கிழமை பி.ப 2.06 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அந்த விமானத்தின் ஊடாக அலங்கஇலங்கையை வந்தடைந்த உக்ரேனிய சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கென இலங்கை தேயிலைச்சபையுடன் இணைந்து விமானநிலைய நிர்வாகம் பாரம்பரிய கலாசார ரீதியிலான நடனம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் விமானநிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும் சுற்றுலாப்பயணிகளுக்காக மீண்டும் விமானநிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், ஸ்கை அப் விமானசேவையே இலங்கைக்குள் முதலாவதாக சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேற்படி சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டிருப்பதாக விமான நிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply