தமிழரசுக் கட்சியா, தமிழ்த்தேசிய கூட்டமைப்பா, எது முதன்மை பெறப்போகின்றது? – வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டையடுத்து, இடம்பெற்று வருகின்ற நிகழ்வுகளும் போக்குகளும் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற போக்கு அந்தக் கட்சிக்கா ரர்கள் மத்தியில் யுத்தம் முடிவடைந்த பின் னர் ஆரம்பித்து படிப்படியாக வளர்ச்சிய டைந்து வந்துள்ளதை வவுனியா மாநாடு தெளிவாக உணர்த்தியிருந்தது.
பழைமையான, உறுதியான கொள்கைகளையுடைய அந்தக் கட்சியை உயிர்ப்பித்து அதன் தலைமையில் செயற்படுவதன் ஊடாகத்தான், இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் உரிமைகளை நம்பிக்கைக்குரிய வகையில் பெற முடியும் என்பது தமிழரசுக் கட்சியினருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.
தந்தை செல்வாவின் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக, அவர்கள் முன்வைத்துச் செயற்பட்டு வருகின்றார்கள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தனித்துச் செயற்பட்டு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்ற அப்போதைய அரசியல் சூழலில் நன்குணர்ந்திருந்த தந்தை செல்வா, மலையகத் தின் முன்னணி கட்சியாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் உள்ளடக்கியதாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி செயற்பட்டிருந்தார்.
அவ்வாறு உருவாக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்னர் செயலிழந்து, விடுதலைப்புலிகள் அரசியலில் உச்சம் பெற்றிருந்தபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
காலத்தின் தேவை கருதியும், அன்றைய தமிழர் அரசியல் சூழ்நிலை காரணமாகவுமே, இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக நாட்டின் அதியுயர் ஜனநாயகக் கட்டமைப்பாகிய பாராளுமன்றத்திலும், அடிமட்டக் கட்டமைப்புக்க ளாகிய உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது.
இருந்த போதிலும், இந்தக் கட்டமைப்புக்களில் விடுதலைப்புலிகளின் நிழல் பிரதிநிதிகளாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் செயற்படநேர்ந்திருந்தது.
இலங்கை அரசியலில் ஆயுத பலம் என்ற இராணுவ சக்தியே அப்போது மேலாதிக்கம் பெற்றிருந்தமையே இதற்குக் காரணமாகும். இலங்கையின் அரச படைகளையே ஆட்டம் காணச் செய்யும் அளவிற்கு விடுதலைப்புலிகள் அப்போது இராணுவ ரீதியாகப் பலம் பெற்றிருந்தார்கள்.
அத்துடன் அரசியல் செயற்பாடுகளை மேவி யுத்த மோதல்கள் முனைப்புப் பெற்று, இராணுவ சம பலத்தில் அரசியல் அப்போது நிலைகொண்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, நாட்டின் சிவில் அரசியல் செயற்பாடுகள் வேகத்தோடு தலையெடுத்தன. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருந்ததையடுத்து, அந்த அமைப்பின் நிழல் செயற்பாட்டுக் கட்டமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பு வந்திறங்கியது.
ஏற்கனவே, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அரசாங்கமும், சர்வதேசமும் தமிழ்த் தரப்பின் அரசியல் தலைமையாக ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருந்தன.
இத்தகைய ஒரு சூழலில்தான், அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் நடத்திய தேர்தல்களில் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு அமோகமாக ஆதரவளித்து, தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்திருந்தார்கள்.
பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே, வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் தெரிவு செய்திருந்தார்கள்.
விடுதலைப்புலிகளை அழித்ததன் பின்னர், விடுதலைப்புலிகளினால் கேடயமாக வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை, தானே மீட்டு எடுத்துப் பராமரித்து மீள்குடியேற்றம் செய்ததாகவும், யுத்த அழிவுகளுக்கு உள்ளாகிய அந்த மக்களின் வாழ்க்கையைத் துளிர்க்கச் செய்வதற்காக, தானே பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக அரசாங்கம் மேற்கொண்டிருந்த பிரசாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை.
தேர்தல்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக, அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் தடைகளையும் இடர்ப்பாடுகளையும் தோற்றுவித்திருந்த போதிலும், தமிழ் மக்கள் அந்த முட்டுக்கட்டைகள் அனைத்தையும் கடந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கே ஆதரவளித்திருந்தார்கள்.
தமிழரசுக் கட்சியின் வகிபாகம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்திருந்ததன் பின்னர், புளொட் அமைப்பினரும் கூட்டமைப்பில் இணைந்து கொண் டார்கள். கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக தமிழரசுக் கட்சியே விளங்கியது, விளங்கி வருகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிக ளின் கூட்டாக இருக்கின்றதேயொழிய அதற்கென தனியான சின்னமோ கட்டமைப்போ கிடையாது. ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகத் திகழ்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தேர்தல்களில் களம் இறங்கி வருகின்றது.
இந்த நிலையில் தலைமைப் பொறுப்புடன், கூட்டமைப்பைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது வழிநடத்துகின்ற ஒரு சக்தியாக தமிழரசுக் கட்சியின் தலைவர்களே விளங்குகின்றார்கள்.
முக்கியமாக தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியல்களைத் தீர்மானிப்பதிலும், அவற்றை அங்கீகரித்து, தேர்தல் சட்டரீதியான நடைமுறைகளுக்கமைவாக தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கும் ஆளுமையும் அதிகாரமும் அவர்களின் கைகளிலேயே இருந்து வருகின்றன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டு அமைப்பின் பெயர் தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாகத் திகழ்ந்த போதிலும், தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பரிந்துரைத்து தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிப்பதற்கான கையெழுத்திடும் அதிகாரம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளருக்கே இருக்கின்றது. இதன் மூலம், தமிழரசுக் கட்சியே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சக்தி வாய்ந்த ஒரு கட்சியாக – தலைமைக் கட்சியாகத் திகழ்கின்றது.
தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பட்டியலில் யார் யாரை சேர்ப்பது என்பது குறித்து, கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமக்குள் பேச்சுக்கள் நடத்தி தீர்மானித்து வந்துள்ள போதிலும், தமிழரசுக்கட்சி தனக்கு வேண்டாதவர்களை நீக்கிவிடக் கூடிய அல்லது ஒதுக்கித் தள்ளிவிடக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தது.
இதன் காரணமாகவே, கூட்டமைப்பில் இணைந்து பாராளுமன்றப் பிரதிநிதிகளாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களையும், சிவநா தன் கிஷோர் உள்ளிட்டவர்களையும் தமி ழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து அந்தக் கட்சியி னால் நீக்கக் கூடியதாக இருந்தது.
தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தனே தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் தலைவராகவும் இருந்தார். இப்போதும் இருக்கின்றார். இந்தத் தலைமைப் பதவியின் அதிகாரத்தை அவர் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், தனக்கே உரிய அரசியல் இயல்போடு வலுவான முறையில் பயன்படுத்தி வந்துள்ளார்.
அவருடைய இந் தச் செயற்பாட்டை அரசியல் ஆய்வாளர்கள் சிலர் சம்பந்தனின் இராஜதந்திரம் அல்லது அரசியல் சாணக்கியம் என்று வர்ணிக்கின்றார்கள்.
சம்பந்தனின் அரசியல் சாணக்கியம்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவே தமிழ், இளைஞர்கள் பல்வேறு குழுக்களாக இணைந்து ஆயுதமேந்திப் போராடினார்கள். மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்களின் சாத்வீகப் போராட்டங் களை வன்முறையின் மூலம் இலங்கை அரசுகள் முறியடித்து வந்ததையும், தமிழ் மக்களை தூண்டிவிடப்பட்ட வன்செயல்க ளின் மூலம் பழிவாங்கி அடக்கியொடுக்கு வதற்கு அரசாங்கங்கள் எடுத்திருந்த நடவடிக்கைகள் எடுத்திருந்ததையும் பொறுக்கமாட்டாத நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த நேரிட்டிருந்தது.
பல குழுக்களாக இளைஞர்கள் பிரிந்திருந்து நடத்திய போராட்டம் சகோதரப் படுகொலைகளுக்கு வழியேற்படுத்தி, அது இறுதிக் கட்டத்தை அடைந்து ஆயுதப் போராட்டத்தின் தலைமை விடுதலைப்புலிகளின் கையில் சென்றடைந்திருந்தது.
ஆயினும்…. விடுதலைப்புலிகளை அரசாங்கம், இந்தியா உட்பட பல உலக நாடுகளின் உதவியோடு விடுதலைப்புலிகளை இல்லாதொழித்தது. இதன் மூலம் முப்பது வருடங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியதாகப் பெருமை பேசி அதனை மாபெரும் வெற்றியாக மாற்றிவிட்டது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் ஒரு பயங்கரவாத அமைப்பாகவே அரச தரப்பினர் கருதுகின்றனர். அரசுக்கு ஆதரவான பௌத்த மதவாத தீவிர சக்திகள் இப்போதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரைப் பயங்கரவாதிகளுக்குத் துணைபோனவர்கள், இப்போதும் துணைபோகின்றார்கள் என்று இனவாதப் பிரசாரம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய ஒரு நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும்பார்க்க, தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்தி தமிழர் தரப்பு அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற நிலைப்பாடு, தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் காணப்படுகின்றது.
இதையும் விட, பழம் பெரும் கட்சியாகிய தமிழரசுக் கட்சியை மீண்டும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியில் ஊறித்திளைத்தவர்கள் தீராத விருப்பத்தைக் கொண்டிருப்பதையும் உணர முடிகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில்தான், முன்னர் ஆயுதமேந்திப் போராட்டம் நடத்தி, பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பி, கூட்ட மைப்பில் பங்காளிகளாக உள்ளவர்களை, தமி ழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர், தேர்தல் பிரசாரங்களின்போதும் மற்றும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதும் இரத்தக்கறை படிந்தவர்கள் என்று மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்ற வகையில் பிரசாரம் செய்து வருகின்றார்கள்.
அது மட்டுமல்லாமல், அரசியல் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாக, முன்னாள் போராளிகளாக இருந்தவர்களின் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்திருக்க நேரிட்டிருக்கின்றதே என்ன செய்வது, என்றவொரு அரசியல் மனப்பாங்கில் தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பில் செயற்பட்டு வருவதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இத்தகைய போக்கு காரணமாகவே, தமிழ் த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் அமைப்பாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் விருப்பமும், கோரிக்கையும் பெயரளவிலேயே தமிழரசுக் கட்சியினரால் ஏற்கப்பட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுக ளைச் செய்ய வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது இன்றுவரையிலும் சாத்தியமாகவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை முதன்மைப்படுத்துவதையும்விட, தமிழரசுக் கட்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இதற்கான முக்கிய காரணம் என பலரும் கருதுகின்றார்கள்.
அதேநேரம், போருக்குப் பிந்திய தமிழ் மக்களின் அரசியல் தலைமையானது, அரசாங்கம் அல்லது அரசாங்கத் தரப்பைச் சார்ந்த தீவிரவாதிகள் குறிப்பிடுவதைப் போன்று பயங்கரவாதத்துடன் எத்தகைய தொடர்பும் அற்றது என்பதை, நடைமுறையில் காட்டுவதற்காகத் தமிழரசுக் கட்சியில் – அதன் ஊடாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில்; புதுப்புனலைப் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கைகளை அந்த அமைப்புக்களின் தலைவராகிய சம்பந்தன் மேற்கொண்டு வருகின்றார்.
இத்தகைய ஒரு போக்கில்தான், சட்டத்தரணியாகிய சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட மோசமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மாவை சேனாதிராஜாவைப் புறந்தள்ளி, வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நீதித்துறையைச் சார்ந்தவரும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருப்பவருமாகிய விக்னேஸ்வரனை சம்பந்தன் கொண்டு வந்தார் என்று, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தமிழரசுக் கட்சியின் தலைமையில் மாற்றம்
வடமாகாண சபையின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்காமல் மாவையைத் தள்ளி வைத்திருந்த சம்பந்தன், தமிழர சுக் கட்சியின் 15 ஆவது மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்கியிருக்கின்றார். இதுவும் அவருடைய அரசியல் சாணக்கிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
இதன் மூலம் தமிழரசுக் கட்சியை வழிநடத்திச் செல்கின்ற பெருமைக்குரிய பொறுப்பை மாவை சேனாதிராஜாவுக்கு அவர் வழங்கியிருக்கின்றார். அத்துடன், மாவைக்கு நெருக்கமான ஆதரவாளர்களின் மனக்குறையையும் அவர் இதன் மூலம் போக்கியிருப்பதாகவே பேசப்படுகின்றது.
அதேநேரம், தமிழரசுக் கட்சியின் தலைமையை மாவையிடம் ஒப்படைத்து, கட்சிச் செயற்பாடுகளை அவருடைய பொறுப்பில் விட்டுவிட்டு, தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை அரச மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுப்பதற்கான வாய்ப்பையும் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது, தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டையடுத்து, முதற் தடவையாக திருகோணமலையில் கூடிய மத்திய செயற்குழு கூட்டத்தில், அந்தக் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும் பார்க்க தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற சம்பந்தனின் அரசியல் காய் நகர்த்தல் முயற்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் கூடுவதற்கு முன்னதாக கொழும்பில் கூடியதாகச் சொல்லப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கூட்டமைப்பைப் பதிவு செய்வது, கூட்டமைப்பை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதற்காக பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களையும் உள்ளடக்கியதாக தேசிய சபையொன்றை அமைப்பது என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு தகவல் வெளியாகியிருந்த சூட் டோடுதான் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கூடியது பற்றியும், தமிழரசுக் கட்சியின் உள்ளூர் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்காக, பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் தலைமையில் அரசியல் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பது பற்றியும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அதேநேரம், இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் உள்ளூர் மற்றும் சர்வதேச பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நெருக்குதல்களை டிசம்பர் மாதத்திற்கிடையில் அரசாங்கம் நிறுத்த வேண்டும். இல்லையேல் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் பரந்த அளவில் சாத்வீகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்காக நாட்டில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளினதும் நேச சக்திகளினதும் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என்றும், இந்தப் போராட்டத்தில் மக்கள் தமிழரசுக் கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும் என்றும் இப்போது தமிழரசுக் கட்சியினால் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா பொறுப்பேற்றதையடுத்து, கிளிநொச்சியில் தொடங்கி, கொழும்பு வரையில் வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் பல இடங்களிலும் புதிய தலைவருக்கும் முன்னாள் தலைவர் உட்பட கட்சியின் முக் கியஸ்தர்களுக்குப் மாலை மரியாதைகளுடன் பெரிய அளவில் வரவேற்பளிக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் செயற்பாடும் கூட, தமிழரசுக் கட்சிக்கு ஓர் எழுச்சியைக் கொடுப்பதற்காகவே மேற்கொ ள்ளப்பட்டிருப்பதாகத் தோன்று கின்றது.
தமிழரசுக்கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டபோதும்சரி, அதற்குப் பின்னரும்சரி, தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்தும் பிரசாரப் பேச்சுக்களே முக்கியத்துவம் பெற் றிருக்கின்றன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பற்றியோ அதன் செயற்பாடுகள் பற்றியோ அந்தப் பேச்சுக்களில் எதுவும் குறிப்பிடப்பட் டதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் தமிழரசுக் கட்சி முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் மக்களை அணிதிரள வேண்டும் என அழைப்பு விடு த்த சம்பந்தன், இந்தப் போராட்டம் கட்சி ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளி யாகியிருந்ததைக் காணக்கூடியதாக இருந் தது.
அத்தகைய கருத்தை அவர் வெளியிட் டிருப்பாரேயானால், முன்னெடுக்கப்படவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மலைபோல நம்பியிருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு என்ன என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது.
இந்தப் பின்னணியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பே, தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமையென்று பலரும் கரு தியிருக்கின்ற வேளையில்தான் தமிழரசுக் கட்சியா, தமிழ்த்தேசிய கூட்டமைப்பா, எது முதன்மை பெறப்போகின்றது என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.