தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் தனிப்பெரும் அரசியல் தமிழ் சக்தியாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் தனிப்பெரும் முஸ்லிம் அரசியல் சக்தியாகும். இரண்டும் கலந்து பேச அண்மையில் முடிவு செய்திருக்கின்றன.
உண்மையில் இச்சந்திப்பு தற்போதைய நிலையில் அவசியமானதாகும். கிழக்கில் முஸ்லிம் அலகை எழுத்தில் வடித்தவர் தந்தை செல்வநாயகம். அது போல் அண்ணன் அமிர்தலிங்கத்தால் முடியாமற் போனால் நான் செய்வேன் என அஷ்ரப் கூறியிருக்கிறார். எனவே, இப்பேச்சுவார்த்தைக்கான அங்கீகாரம் எப்போதோ கிடைத்துவிட்டது.
எனினும், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிழக்கில் பேரின முஸ்லிம் முகவர்களே வெற்றி பெற்றார்கள். கிழக்கில் அந்த முகவர்களைத் தோற்கடிக்க வேண்டுமாயின் முஸ்லிம் தனித்துவக் கட்சி அவசியப்பட்டது.
ஏனெனில், கிழக்கு முஸ்லிம்கள் தெற்கு பேரின முஸ்லிம் அரசியல் தலைவர்களையே சார்ந்து நின்றார்கள். தமிழர் ஆதரவு அதற்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது.
அதைச்சமாளிக்கும் வியூகமாகத்தான் முஸ்லிம் தனித்துவக் கட்சியின் பெயரால் முஸ்லிம்கள் இணைக்கப்பட்டார்களே தவிர தமிழ்தரப்புக்கு எதிராகவல்ல.
ஒரு புறம் பேரினவாதத்தை தமிழ் தரப்போடு கூட்டு சேர்ந்து எதிர்க்க வேண்டியிருப்பினும் முஸ்லிம்களின் தனித்துவத்தையும் பேண வேண்டியிருக்கிறது. முஸ்லிம் வாக்கு வங்கி கிழக்குக்கு வெளியே தேசிய கட்சிகளுக்கு 80 வீதமாகும்.
கிழக்கில் மட்டுமே தனித்துவ முஸ்லிம் கட்சிக்கு 80 சதவீதமாகும். எனவே, தலைவர் அஷ்ரப் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பு தமிழ் தரப்புக்கு அளப்பரியதாகும்.
இது இலேசாகக் கிடைக்கவில்லை. 1948 ஆம் ஆண்டின் டொமினியன் சுதந்திரத்துக்கு முன் இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் கனதனவான்களினதும் நிலச் சுவாந்தார்களினதும் கைகளிலேயே இருந்தன.
அவர்களிலிருந்தே முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும் உருவாக்கப்பட்டது. அந்நிலை 1948 ஆம் ஆண்டுக்குப் பின் மாற்றம்பெற்று முஸ்லிம் அமைச்சரே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர் எனும் நிலை உருவாகியது.
முதற்கட்டம் சமூகம் தலைமையை உருவாக்கியதாகும். இரண்டாம் கட்டம் அரசு சமூகத்தலைமையை உருவாக்கிக் கொடுத்ததாகும்.
ஆங்கிலேயர் பல்லின அணுகு முறையைக் கொண்டிருந்ததாலும் குறித்த சமூகத்துக்கான செயலாண்மையை தனித்தனி சமூகத்தலைமைக்கே கொடுத்திருந்தமையாலும் முதற்கட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு அளப்பரிய சேவைகள் நிகழ்ந்தன.
இன்னொரு காரணம் வர்த்தக நோக்குக்கு ஆங்கிலேயர் முதலிடம் அளித்ததுமாகும்.
ஆக, முஸ்லிம் அமைச்சர் முஸ்லிம் சமூகத்தலைவரான இரண்டாம் கட்டமே அவரை பேரினப்பிடியில் சிக்க வைத்தது.
கலாநிதி பதியுதீன் மஹ்மூத் சிங்கள மொழி மட்டும் எனும் தீர்மானத்தை வழி மொழிந்ததும், கல்வி முறையில் தரப்படுத்தலைக் கொண்டு வந்ததும், சிறுபான்மைகளின் தனியார் கல்விக் கூடங்களை தேசிய உடமையாக்கியதும் தமிழ் – முஸ்லிம் உறவைக் கடுமையாகப் பாதித்தன.
அவர் தனக்கு வழங்கப்பட்ட அரச பொறுப்பைத்தான் செய்தார். எனினும் இவை சிறுபான்மையோடு சிறுபான்மையை மோத விடும் பேரினவாதத்தின் சூழ்ச்சியாகவே அமைந்தது.
பண்டா– செல்வா ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு கிழக்கில் ஓர் அலகு என எழுதிய தந்தை செல்வாவின் அரவணைப்புக் கரத்தைத் தட்டி விடுவது போன்றே இச்செயற்பாடு கள் அமைந்துவிட்டன.
முதற்கட்டத்தில் சேர் பொன் இராமநாதன், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை திரிபுபடுத்தியதுதான் அப்போது வாழ்ந்த முஸ்லிம் தலைவர்கள் பேரினவாதத்துக்குச் சார்பாக செயற்பட காரணமாயிற்று எனலாம்.
எனினும் தனிப்பட்ட ஒருவர் மீது கொண்டிருந்த வெறுப்புக்காக முஸ்லிம் தலைவர்கள் பேரினவாதத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
உண்மையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பேரினவாதத்தை இனங்கண்டு 40 ஆண்டுகள் கழித்தே முஸ்லிம்கள் இனங்கண்டார்கள்.
தந்தை செல்வாவின் நல்லுறவாலேயே இதை மாமனிதர் அஷ்ரப் பெற்றுக்கொண்டார். ஆக, இடைப்பட்ட 40 ஆண்டுகளிலும் தேசிய அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியையே முஸ்லிம்கள் நம்பியிருந்தனர்.
ஐக்கிய தேசியம் எனும் சொல்லும் பச்சை நிறமும் வசதிபடைத்தோரும் அதில் இருந்தமையே இதற்கொரு காரணமாகும். ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகளாக மாக்சீயக் கட்சிகள் இருந்ததும் இன்னொரு காரணமாகும்.
மாக்சீயக் கொள்கை மதங்களுக்கு விரோதமானது, சமதர்மம் வர்த்தக ஏக போகத்துக்கு எதிரானது என்றெல்லாம் பாமர முஸ்லிம் வெகுஜனங்கள் நம்ப வைக்கப்பட்டனர். இந்நிலையில்தான் 1951 ஆம் ஆண்டு முதல் அரசியல் ரீதியில் பேரினவாதம் தலை தூக்கி வளர ஆரம்பித்தது.
100க்கு 74 வீதம் பெரும்பான்மைச் சமூகம் வாழுகையில் பேரினவாதத்தால் ஆட்சி மாறுவது நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட பதியுதீன் மஹ்மூத் அதற்கேற்றபடி தனது அரசியல் வியூகத்தை வகுத்துக்கொண்டார்.
1. பெரும்பான்மைச் சமூகப் பேரினவாதத்தில் முற்றிலும் சாய்தல்.
2 ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியை அழிக்க இஸ்லாமிய சமதர்மத்தின் பெயரால் பாமர முஸ்லிம் வெகுஜனங்களைப் பிரித்தெடுத்தல்.
3. உங்கள் பந்துகளை ஒரே கூடையில் போடாமல் மறு கூடையிலும் போடுங் கள். அப்போது தான் மறுகட்சி ஆட்சிக்கு வந்தாலும் பயன் கிடைக்கும் எனக் கருத்துருவாக்கம் செய்தல் என்பனவே கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் அரசியல் அணுகு முறைகளாக இருந்தன.
இவற்றின் மூலம் பெரும்பான்மைச்சமூகத்தின் அபரிமித நம்பிக்கையைப் பெற்று பேரினவாதத்துக்கு முஸ்லிம் சமூகத்தை உட்படுத்தி கல்வித்துறையில் மட்டுமே அவரால் முஸ்லிம் சமூகத்துக்கு நன்மைபுரிய முடிந்தது.
கல்வித்துறையில் மேன்மை பெறுவது முக்கியமானது தான். அதற்காக பேரினவாதத்துக்கு உதவி புரிந்திருக்கக் கூடாது. ஏனெனில், பேரினவாதம் அசுர வளர்ச்சி பெற்றால் சிறுபான்மைகளின் கல்வித்துறையை மட்டுமல்ல வாழ்வாதாரத்தையே பாதித்துவிடும்.
தற்போது அத்தகைய நிலைதான் நாட் டில் உருவாகியிருக்கிறது. கல்வித்துறை மட்டுமென்று முஸ்லிம் சமூகத்தின் மத வழிபாடு, பள்ளிவாசல்கள், வர்த்தகம், இருப்பு, வரலாறு ஆகிய எல்லாவற்றுக்குமே பேரினவாதத்தின் அசுர வளர்ச்சி இடையூறு செய்கிறது.
யாப்பில் உத்தர வாதப்பட்டிருக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லை. தந்தை செல்வா வதைபட்டும் சிறை சென்று கூறிய உண்மைகளை இனிமேலாவது சிறுபான்மைகள் புரிந்துகொண்டு இணைய வேண்டும். இன்றேல் பேரினவாதத்துக்கு வாய்ப்பாகி விடும்.
ஏ.ஜே.எம்.நிழாம்