உக்ரேனில் நடப்பது அயோக்கிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி என்பதை மனதில் கொண்டு அங்கு நடப்பதைப் பார்ப்போமாக.
London School Economics என்னும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் உக்ரேனை புட்டீனை மாட்ட வைக்கும் பொறியாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில நேட்டோ நாடுகள் பாவிக்கின்றன என ஒரு கட்டுரையை உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade எழுதியுள்ளார்.
அவரின் கருத்துப் படி உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கத் தூண்டும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
அவரை அங்கு சிக்க வைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அவருக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்வது புட்டீனின் எதிரிகளின் நோக்கம் என்கின்றார் Robert H Wade.
Republics of the USSR: 1. Armenian USSR 2. Azerbaijani USSR 3. Belarusian USSR 4. Estonian USSR 5. Georgian USSR 6. Kazakhstan USSR 7. Kyrgyz USSR 8. Latvian 9. Lithuania 10. Moldova 11. Russian 12 Tajika 13. Turkmenistan 14. Ukraine 15. Uzbek
வல்லரசுகளுக்கு கவசம் அவசியம்.
ஒரு வல்லரசு நாட்டைச் சுற்றிவர ஒரு கவசப் பிரதேசம் இருத்தல் அவசியம். அப்பிரதேசத்தில் இருக்கும் அரசுகள் நட்பாக அல்லது நடுநிலையாக இருக்க வேண்டும்.
வலிமை மிக்க இரண்டு போட்டி நாடுகளிடையே இருக்கின்ற நாடுகள் எந்த நாட்டுக்கு கவச நாடாக இருப்பது என்ற போட்டி இடையில் இருக்கும் நாட்டிற்கு மிகவும் பாதகமாக அமையும்.
இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் இருக்கும் நேப்பாளம் உருப்பட முடியாமல் இரண்டு நாடுகளும் சதி செய்கின்றன.
நேப்பாளத்தின் நிலை இரண்டு யானைகள் சண்டை பிடித்தாலும் காதல் செய்தாலும் காலடியில் இருக்கின்ற புற்களுக்குத்தான் அழிவு என்பது போன்றது.
Creation of the Warsaw Pact
In response to the establishment of NATO and the inclusion of a newly armed West Germany in the alliance, the Soviet Union concluded a military defensive alliance known as the Warsaw Pact with Albania, Bulgaria, Czechoslovakia, East Germany, Hungary, Poland, and Romania in 1955. It would be NATO’s principal military adversary for the rest of the Cold War.
சோவியத் ஒன்றியத்தின் இரும்பு வேலி நாடுகளாக போலாந்து, கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, அல்பேனியா ஆகிய நாடுகள் இருந்தன.
இவை சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளல்ல ஆனால் இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகள் என ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவிற்கு சவால் விடும் நாடுகளாக இருந்தன.
அந்த இரும்பு வேலி 1991இல் வார்சோ கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் தகர்ந்து போனது. “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள்” என்னும் படைத்துறைக் கூட்டமைப்பை 1994-ம் ஆண்டு இரசியா ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான், ஆர்மீனியா, பெலரஸ், கஜக்கஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து உருவாக்கியது.
ஆனால் அதில் இருந்து ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான் பின்னர் விலகி விட்டன.
அந்த பாதுகாப்பு கூட்டமைப்பில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் இருத்தல் அவசியம். உக்ரேனியர்களை நேட்டோ கூட்டமப்பு தனது பரப்புரைகள் மூலம் தம் பக்கம் கவர்ந்து விட்டது.
நேட்டோவில் இணையக் கூடிய தகமை உக்ரேனுக்கோ அல்லது ஜோர்ஜியாவிற்கோ இல்லை. இருந்தும் அவை இரண்டையும் தாம் வரவேற்பதாக நேட்டோ நாடுகள் அறிவித்தன.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனை போன்ற இரசியாவுடன் முறுகலை விரும்பாத நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதில் அக்கறை காட்டவில்லை.
நட்பற்றவர்களால் சூழப்பட்ட இரசியா
உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைச் சூழ பதினைந்திற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன.
வட துருவத்தில் அமெரிக்காவின் அலாஸ்க்கா மாகாணம் எல்லையாக இருக்கின்றது கிழக்கில் நேட்டோ நாடுகளான லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, நோர்வே, போலாந்து ஆகிய நேட்டோ நாடுகள் உள்ளன.
தூர கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
தற்போது இரசியாவுடன் பல ஒத்துழைப்பைச் செய்யும் வல்லரசான சீனா இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது.
அணுகுண்டு வைத்திருக்கும் வட கொரியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. உக்ரேனும் ஜோர்ஜியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்ட நாடுகள்.
2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து அதன் நிலப்பரப்பில் இரு பகுதிகளை தனி நாடாக்கியது இரசியா.
2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களையும் பிரித்து இரசியா தனி நாடாக்கியது.
கஜகஸ்த்தானும் மொங்கோலியாவும் பிரச்சனை இல்லாத இரசியாவின் அயல் நாடுகள் எனக் கருதலாம்.
இரசியாவின் ஒரே நட்பு நாடு பெலாருஸ் மட்டுமே. இந்த சூழலில் இரசிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கொள்கை வகுப்பாளர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றார்கள்.
புட்டீனின் சோவியத்-2.0 கனவு
தற்போதைய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் 1991-ம் ஆண்டில் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியம் உடைந்ததை 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார்-அரசியல் விபத்து எனக் கருதுகின்றார்.
மீண்டும் இரசியா தலைமையில் சோவியத் ஒன்றியம்-2ஐக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவுடன் 1999-ல் ஆட்சிக்கு வந்த புட்டீன் 2020-ம் ஆண்டு இரசியா உலகின் முதற்தர வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டவர்.
சோவியத் ஒன்றியம் போல் பொருளாதாரம் மீது அதிக கவனம் செலுத்தாமல் படைத்துறையை மட்டும் கட்டி எழுப்பினால் போதாது என்பதை நன்கு உணர்ந்தவர்.
படைத்துறையை சிக்கனத்துடன் கட்டி எழுப்ப வேண்டும் என நினைப்பவர். இரசியாவை முன்பு ஆண்ட பொதுவுடமைக் கட்சியினர் படைக்கல உற்பத்தியில் சிக்கனத்தையோ பொருளாதாரத் திறனையோ கடைப்பிடிக்கவில்லை.
மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை கட்டி எழுப்ப இரசியாவிற்கு மிகவும் அவசியமான நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஆகும்.
இரண்டு நாடுகளையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைப்பது போல அமெரிக்கா நடிக்கின்றது. இரண்டு நாடுகளும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைய விரும்புகின்றன.
அப்படி இணைய முற்பட்டால் இரசியா அதைக் கடுமையாக எதிர்க்கும் என நேட்டோ நாடுகள் அறியும்.
இன்னொரு நாட்டுடன் போர் புரியக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது.
உறுதியான அரசு, அமைதி, மனித உரிமைகளைப் பேணுதல், காத்திரமான பொருளாதாரம் போன்றவை உள்ள நாடுகள் மட்டுமே நேட்டோவில் இணையலாம்.
ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முயன்றமை விளடிமீர் புட்டீனைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
2022 பெப்ரவரி மாதம் 24-ம் திகதி இரசியாவை சுற்றி ஒரு இரும்பு வேலி போடும் நோக்கத்துடன் இரசியப் படைகளை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார்.
பொருளாதாரத்தால் இரசியாவை விழுத்தினார்களாம்
பொருளாதாரப் பிரச்சனையால் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தமைக்கு அது ஆப்கானிஸ்த்தானில் படையெடுத்தமை முக்கிய காரணமாகும்.
சோவியத்-2.0ஐக் கட்டி எழுப்பும் முயற்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய அமெரிக்கா திட்டம் போட்டிருக்கலாம்.
அமெரிக்கா உக்ரேனுடன் ஒரு தொடர்ச்சியான போரை நடத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் காத்திருந்த வேளையில் 2014-ம் ஆண்டு புட்டீன் ஒரு சில நாட்கள் செய்த படை நடவடிக்கையின் மூலம் இரசியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவைக் கைப்பற்றினார்.
அப்போரில் இரசியாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படாமல் புட்டீன் பார்த்துக் கொண்டார்.
அதை சாட்டாக வைத்து உக்ரேனியர்களை நேட்டோவில் இணையத் தூண்டும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
உக்ரேனியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களும் போதிய பயிற்ச்சியும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளால் வழங்கப்பட்டது.
2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவில் உக்ரேன் இணையவேண்டும் என அதன் அரசியலமைப்பு யாப்பை திருத்தியது.
இது புட்டீனுக்கு போடப்பட்ட தூண்டிலாக இருக்கலாம். 2020இல் சோவியத்-2.0 கட்டி எழுப்பும் திட்டத்துடன் இருந்த புட்டீனுக்கு இது பெரும் சினத்தை மூட்டியது.
அப்போது பரவிய கொவிட்-19 பெருந்தொற்று அவருக்கு தடையாக இருந்தது. அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களும். லேசர் படைக்கலன்களும் தொலைதூர தாக்குதல் விமானமான B-21 போன்றவை போர்க்களத்தில் முழுமையான பாவனைக்கு தயாராக முன்னர் 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்கு தன் படைகளை அனுப்பினார்.
உண்மையை உளறிக் கொட்டினாரா ஜோ பைடன்?
அமெரிக்க அதிபர் 2022 மார்ச் 26-ம் திகதி போலந்து தலைநகர் வார்சோவில் தயாரிக்காத உரை ஒன்றை ஆற்றும் போது “கடவுளிற்காக அந்தாள் (புட்டீன்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது” என்றார்.
இது அவர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லவில்லை என்பதை உலகை நம்ப வைக்க அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் உட்பட பலர் சிரமப் பட்டார்கள்.
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிலிங்கன் தங்களிடம் இரசியாவில் ஆட்சி மாற்றம் செய்யும் உபாயம் இல்லை என்றார்.
ஆனால் புட்டீன் உக்ரேனுக்கு படையனுப்பிய 2022 பெப்ரவரி 24-ம் திகதி தனது வெள்ளை மாளிகையில் உரையாற்றைய ஜோ பைடன் இரசியாமீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையல்ல மாறாக இரசியாவைத் தண்டிக்கச் செய்யப்பட்டவை.
அதனால் இரசியர்களுக்கு புட்டீன் எதைக் கொண்டு வந்தார் என்பதை உணரவைக்க முடியும் என்றார்.
அதன் பின்னர் மூன்று நாள்கள் கழித்து பிரித்தானியப் படைத்துறை அமைச்சர் எழுதிய கட்டுரை ஒன்றில் புட்டீனின் தோல்வி முழுமையானதாக இருக்க வேண்டும்.
உக்ரேனிய இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இரசியர்கள் புட்டீன் தங்களைப்பற்றி என்ன எண்ணுகின்றார் என்பது உணர்த்தப் படவேண்டும்.
அதன் மூலம் புட்டீனின் நாட்கள் எண்ணப் படவேண்டும். புட்டீனுக்குப் பின்னர் இரசியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்ய முடியாத அளவிற்கு அவர் அதிகாரத்தை இழக்க வேண்டும் என்றார்.
2022 மார்ச் முதலாம் திகதி பிரித்தானிய தலைமை அமைச்சரின் பேச்சாளர் இரசியா மீது கொண்டு வரப்பட்டுள்ள தடை புட்டீனின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வரும் என்றார்.
இந்த அறிக்கைகள் உக்ரேனை நடுவணாக வைத்து மாஸ்க்கோவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அமெரிக்க உபாயத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார் உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade.
இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு உக்ரேனை புதைகுழியாக்கக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனியரகளுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மறுபுறத்தில் இரசியப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரத் தடைகளை இரசியாமிது விதிக்கின்றன நேட்டோ நாடுகள். அதே வேளை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் புட்டீனை ஒரு கொடூரமானவராகவும் மன நிலை சரியில்லாதவராகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.
Consortium News என்னும் இணையத் தளத்தில் Joe Lauria எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கு நாடுகளின் இறுதி நோக்கம் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றி தமக்கு இணக்கமாக நடக்கக் கூடிய ஒருவரை இரசியாவின் ஆட்சி பீடத்தில் என்றார். ஆனால் இரசிய மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள்.
https://www.veltharma.com/