இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த சமூக ஊடக சேவைகளை பயனர்கள் அணுகுவதற்கான வசதியை அரசு மீண்டும் வழங்கியிருக்கிறது.
முன்னதாக, இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களுக்கான அணுகுவதற்கு 36 மணி நேர கட்டுப்பாட்டை இலங்கை அரசு விதித்தது.
இது தொடர்பான ஊடரங்கு உத்தரவின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எழுத்துபூர்வ அனுமதியின்றி எந்தவொரு பொது வீதி, பூங்கா, ரயில்கள், அல்லது கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு சனிக்கிழமை மாலையில் அமல்படுத்தப்பட்டது.
I will never condone the blocking of social media. The availability of VPN, just like I’m using now, makes such bans completely useless. I urge the authorities to think more progressively and reconsider this decision. #SocialMediaBanLK #SriLanka #lka
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 3, 2022
இதைத்தொடர்ந்து நாட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியும் பல இடங்களில் செயலிழந்தது.
இவை “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று ஒரு செல்பேசி பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை அரபு கால பாணி என்று சமூக ஊடக பயனர்கள் பரவலாக விமர்சித்தனர்.
இதில் முக்கியமானதாக இலங்கை அமைச்சரும் பிரதமரின் மகனுமான நாமல் ராஜபக்ச சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கை விமர்சித்து வெளிப்படையாகவே தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான அவர், “முற்போக்கான முறையில் சிந்தியுங்கள்” என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN வசதி இருந்தால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அது முற்றிலும் பயனற்றதாக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காகச் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில், அது பகிரப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் சமூக ஊடக அணுகல் வசதியை இலங்கை தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை மீண்டும் வழங்கியது.